UPDATED : செப் 21, 2026 09:56 PM
ADDED : செப் 21, 2026 09:57 PM
சென்னை:
மயிலாப்பூரில் உள்ள விதை பிரசவ மையம் மற்றும் மருத்துவமனையில் முதல் முறையாக சென்னையை சேர்ந்த பெண் ஒருவருக்கு நீரில் பிரசவம் நடைபெற்றுள்ளது. தாயின் விருப்பம் பெற்று பாதுகாப்பு மற்றும் மரியாதையை மையமாகக் கொண்டு பிரசவப் பராமரிப்பு வழங்கப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இது குறித்து விதை மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் மருத்துவ இயக்குநர் டாக்டர் ஜெ.நந்தினி கூறியுள்ளதாவது:
“நீரில் பிரசவம் என்பது, மருத்துவ ரீதியாக தகுதியான கர்ப்பிணிப் பெண் பிரசவ வலியின் போது வெதுவெதுப்பான நீரில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட குளத்தில் இருந்து, சூழ்நிலை ஏற்றதாக இருந்தால் நீரிலேயே குழந்தையைப் பெற்றெடுக்கும் முறையாகும். இதன் மூலம் பிரசவத்தின் போது தளர்வும், வசதியான நிலைகளில் அசைவதற்கான வாய்ப்பும் கிடைக்கக்கூடும்.
எனினும், அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் இந்த முறை பொருத்தமானதல்ல. தாய் மற்றும் குழந்தையின் உடல்நிலையை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்த பின்னரே நீரில் பிரசவம் மேற்கொள்ளப்படுகிறது. தேவையான நேரத்தில் மருத்துவத் தலையீடு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முதலில், தாயின் விருப்பங்கள் கேட்கப்பட்டு மதிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் மருத்துவத் தலையீடு அவசியமானால், தாய் மற்றும் குழந்தையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பது எங்களது பொறுப்பு,” என்றார்.
மேலும், விதை மருத்துவமனை 'கான்ஷியஸ் பர்த்திங்' என்ற அணுகுமுறையின் மூலம், பிரசவம் தொடர்பான தகவல்களை தாயிடம் விளக்கி, அவரது விருப்பங்களுக்கும் முடிவுகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. மேலும், மருத்துவர்கள், செவிலியர்கள், பிசியோதெரபிஸ்ட் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் உள்ளிட்ட பல்துறை குழுவினர் இணைந்து தாய்மார்களுக்கு பராமரிப்பு வழங்குகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, முதல் நீரில் பிரசவ அனுபவம் நேர்மறையாகவும் நம்பிக்கையளிப்பதாகவும் இருந்ததாக சம்பந்தப்பட்ட தாய் தெரிவித்தார். இந்த முயற்சி மூலம் சென்னையில் தாயை மையமாகக் கொண்ட, மருத்துவப் பாதுகாப்புடன் கூடிய பிரசவப் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மருத்துவமனை முயற்சி மேற்கொண்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
