தேர்வு இல்லாத நாட்களில் போட்டிகள் நடத்த எதிர்பார்ப்பு
தேர்வு இல்லாத நாட்களில் போட்டிகள் நடத்த எதிர்பார்ப்பு
UPDATED : அக் 28, 2026 05:47 PM
ADDED : அக் 28, 2026 05:49 PM
கோவை:
பாரதியார் பல்கலையின்கீழ் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் 22 அரசு கலை அறிவியல் கல்லுாரிகள், 15 அரசு உதவிபெறும் கல்லுாரிகள் மற்றும் 109 சுயநிதி கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் 32 கல்லுாரிகள் தன்னாட்சி அந்தஸ்துடன் செயல்படுகின்றன.
பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் செப்டம்பர் இறுதி முதல் நடந்துவருகின்றன. டேபிள் டென்னிஸ், கிரிக்கெட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் யோகா போன்ற போட்டிகள் இந்த வாரம் நடக்கின்றன.
'தேசிய அளவிலான பல்கலைகளுக்கு இடையேயான போட்டிகள் அடுத்தாண்டு மார்ச் மாதம் நடக்கிறது. இதற்கான முன்பதிவுகள் பிப்ரவரி வரை நடக்கும். இதற்கென சிறந்த மாணவ, மாணவியரை தேர்வு செய்வதற்கு பாரதியார் பல்கலை போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதேசமயம், தன்னாட்சி கல்லுாரிகள் சிலவற்றில் மாதிரி தேர்வுகள், பருவ தேர்வுக்கான செய்முறை தேர்வுகள் தற்போது நடந்துவருகின்றன. விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் மாணவர்களை சில கல்லுாரிகள் மறுதேர்வுக்கு அனுமதிக்கின்றன. சில கல்லுாரிகள் அனுமதிப்பதில்லை.
தேர்வு தான் முக்கியம் என்று பல்கலை போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்பதில்லை. தேசிய போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களின் கனவு தகர்ந்துபோகிறது. எனவே, போட்டிகளை தேர்வு இல்லாத தேதிகளில் நடத்தினால் மாணவர்கள் கனவும் நனவாகும். இதுகுறித்து பல்கலையிடம் முறையிட்டுள்ளோம்' என்கின்றனர், தன்னாட்சி கல்லுாரி உடற்கல்வி இயக்குனர்கள்.
