UPDATED : நவ 02, 2026 05:47 PM
ADDED : நவ 02, 2026 05:48 PM
கிணத்துக்கடவு:
கிணத்துக்கடவு, அரசம்பாளையம் அமிர்தா வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் கிராமப்புற வேளாண் பணி அனுபவ திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, தேவரடிபாளையம் கிராமத்தில் நடந்த கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாமில் பங்கேற்றனர். இதில், கால்நடைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், அறிவியல் பூர்வமான கால்நடை வளர்ப்பு முறைகளை ஊக்குவித்தல் மற்றும் கால்நடை நோய் தடுப்பு, மருத்துவ பராமரிப்பு உள்ளிட்ட தகவல்களை சேகரித்தனர்.
முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி, செயற்கை கருவூட்டல், சினை பரிசோதனை, நாய்களுக்கான வெறிநாய்க்கடி தடுப்பூசி, குடற்புழு நீக்கம் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
முகாமில் பங்கேற்ற விவசாயிகளிடம் நேரடியாக கலந்துரையாடி, கால்நடை மேலாண்மையில் எதிர்கொள்ளும் நடைமுறை சவால்கள் மற்றும் பராமரிப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.
