மாணவர்களே இல்லாத அரசு பள்ளி: தனிமையில் தலைமையாசிரியர்
மாணவர்களே இல்லாத அரசு பள்ளி: தனிமையில் தலைமையாசிரியர்
UPDATED : டிச 18, 2010 12:00 AM
ADDED : டிச 18, 2010 05:12 PM
வருஷநாடு: தேனி மாவட்டம் வருஷநாடு அருகே மாணவர்கள் இல்லாமல் இரண்டு ஆண்டு களாக இயங்கும் அரசு பள்ளிக்கு, தலைமையாசி ரியர் மட்டும் வந்து செல்கிறார்.
வருஷநாடு அருகே மேகமலை ஊராட்சிக்கு உட்பட்ட மலைகிராமமான பொம்முராஜபுரத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு 2008ல் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி துவங்கப்பட்டது. இந்த கிராமம் வனத்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதால், பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், கட்டடம் கட்ட வனத்துறை அனுமதி மறுத்துவிட்டது.
இதையடுத்து, துவக்கம் முதல் இந்த பள்ளி கிராம சாவடியில் இயங்கி வருகிறது. பள்ளி துவங்கிய போது 30 மாணவர்கள் படித்து வந்தனர். இங்கு பணிபுரிய நியமித்த ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வருவதில்லை. மேலும், வகுப்பறை முதற்கொண்டு அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. இதனால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாக கூறி இப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை அருகிலுள்ள வேறு பள்ளிகளில் சேர்த்துவிட்டனர்.
இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் யாரும் பொம்முராஜபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு வருவதில்லை. மாணவர்கள் வராதபோதும், இங்கு நியமிக்கப்பட்ட தலைமையாசிரியர் ரேகா மட்டும் கடமை தவறாமல் பள்ளிக்கு சென்று வருகிறார். கடமலை மயிலை ஒன்றிய உதவி தொடக்க கல்வி அலுவலர் தமிழன் கூறியதாவது:
பொம்முராஜபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மலைப்பகுதியில் அமைந்து இருப்பதால், ஆசிரியர்கள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. இதனால், நாளுக்கு நாள் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து தற்போது ஒரு மாணவர்கள் கூட இல்லை. மாணவர்கள் இல்லாத பள்ளிக்கு, ஆசிரியர் சென்றுவருவது குறித்து அரசுக்கு ஆய்வு அறிக்கை அனுப்பியுள்ளேன். அரசிடமிருந்து உத்தரவு வந்தவுடன், ஆசிரியர் மாற்றம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தமிழன் கூறினார்.
