ஆசிரியர்களின் சம்பளத்தை உயர்த்த விரைவில் நடவடிக்கை: தென்னரசு
ஆசிரியர்களின் சம்பளத்தை உயர்த்த விரைவில் நடவடிக்கை: தென்னரசு
UPDATED : டிச 29, 2010 12:00 AM
ADDED : டிச 29, 2010 05:07 PM
சென்னை: ""இடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பளச் சலுகை குறித்து, முதல்வருடன் ஆலோசனை நடத்தியபின் அறிவிக்கப் படும்,'' என, அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்கக்கோரி, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தப் பிரச்னை தொடர்பாக, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசை நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது, அமைச்சர் தெரிவித்த கருத்துக்கள் குறித்து, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற நிர்வாகிகள் சேர்ந்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது:
தி.மு.க., அரசு, ஆசிரியர்களுக்கு சலுகை, சம்பளம் வழங்குவதில் எந்தவித குறையும் வைத்ததில்லை. தற்போது ஏற்பட்டுள்ள இழப்பை சரிசெய்ய வேண்டும் என்று அரசு கருதுகிறது. ஆனால், நிதி நெருக்கடி காரணமாக, உடனடியாக செய்ய இயலாத நிலை உள்ளது. எனினும், நிதித்துறையையும், முதல்வரையும் கலந்து ஆலோசித்து, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்கு தமிழக அரசு வழிவகை செய்யும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
