சென்னைக்கு இணையான மருத்துவக் கல்லூரி கடலூரிலும் அமையும்
சென்னைக்கு இணையான மருத்துவக் கல்லூரி கடலூரிலும் அமையும்
UPDATED : ஜன 08, 2011 12:00 AM
ADDED : ஜன 08, 2011 12:54 PM
கடலூர்: சென்னை அரசு மருத்துவக் கல்லூரிக்கு இணையாக, கடலூரில் மருத்துவக் கல்லூரி அமையும் என, மாவட்ட மருத்துவத் துறை இணை இயக்குனர் கூறினார்.
கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என, சட்டசபையில் கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசு பொது மருத்துவமனை இணை இயக்குனர் டாக்டர் கமலக்கண்ணன் கடலூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:கடலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது.
மருத்துவக் கல்லூரிக்காக கேப்பர் மலையில் 103 ஏக்கர் நிலம் உள்ளதால், சென்னை மருத்துவக் கல்லுரிக்கு இணையாக கல்லூரி அமையும்.கடலூர் அரசு பொது மருத்துமனையை தேசிய தரச் சான்று பெறுவதற்காக முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலூர் அரசு மருத்துமனைக்கு தினமும் வெளி நோயாளிகள் 4,000 பேரும், உள் நோயாளிகள் 550 @பரும் உள்ளனர்.
மருத்துவக் கல்லூரியாக உயர்த்தப்பட்டால் நோயாளிகள் வருகை மேலும் அதிகாரிக்கும்.மேலும் நோயாளிகள் புதுச்சேரி மற்றும் சென்னைக்குச் செல்ல வேண்டிய நிலை இருக்காது. தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் 53 டாக்டர்களும், 588 படுக்கை வசதிகள் உள்ளது.
மேலும் மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு 50 லட்சம் ரூபாய் செலவிலும், இரண்டு கோடி ரூபாய் செலவில் குழந்தைகளுக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவு கட்டடமும் கட்டப்படவுள்ளது. இவ்வாறு இணை இயக்குனர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.
