UPDATED : ஜன 27, 2011 12:00 AM
ADDED : ஜன 27, 2011 10:16 AM
தற்போது 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு 8 ம் வகுப்பு வரை, வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளிகளில் கட்டாய கல்வி அளிப்பதற்கான கல்வி உரிமை சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டமானது, விரைவில் உயர்நிலை கல்வியிலும் அமலாகும் என்று தான் நம்புவதாக மத்திய மனிதவள அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
மனிதவள அமைச்சகமும், யுனிசெப் அமைப்பும் ஏற்பாடு செய்த விழாவில் பேசியபோது இதனை தெரிவித்த அமைச்சர், "கல்வி உரிமை சட்டம், பள்ளிகளிலிருந்து மாணவர்கள் அதிகளவில் வெளியேறுவதை தடுக்க உதவும். ஆரம்ப பள்ளிகளில் சேரும் மாணவர்களில் 60% பேர், மேல்நிலை கல்வியான 12 ம் வகுப்பை தொடுவதில்லை. நம் நாட்டில் பள்ளிக்கு செல்லாத சுமார் 80 லட்சம் குழந்தைகள் உள்ளனர். உலகின் பல நாடுகளில் இந்தளவிற்கு மொத்த மக்கள் தொகையே கிடையாது.
உயர்நிலை கல்வியை முடித்த பிறகுதான், பல்கலைக்கழகம் சென்று படிப்பதா? அல்லது தொழிற்கல்வி படிப்புகளில் சேர்வதா? என்பதை மாணவர்கள் முடிவுசெய்ய முடியும்" என்றார்.
