திருச்சி ஐ.ஐ.எம்., பாடத்திட்டம் இந்திய தன்மையுடன் அமையும்
திருச்சி ஐ.ஐ.எம்., பாடத்திட்டம் இந்திய தன்மையுடன் அமையும்
UPDATED : பிப் 12, 2011 12:00 AM
ADDED : பிப் 12, 2011 02:57 PM
திருச்சி: ""திருச்சி ஐ.ஐ.எம்., பாடத்திட்டம் இந்தியத் தன்மையுடன் அமையும்,'' என, திருச்சி ஐ.ஐ.எம்., முதல் இயக்குனராக நியமிக்கப்பட்ட, பிரபுல்லா அக்னிஹோத்ரி தெரிவித்தார்.
இந்தியாவில் ஆமதாபாத், இந்தூர், பெங்களூரு, கோல்கட்டா, கோழிக்கோடு, லக்னோ உள்ளிட்ட, 12 நகரங்களில், திருச்சி உட்பட இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (ஐ.ஐ.எம்.,) செயல்பட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.திருச்சி தவிர, மற்ற நகரங்களில் ஐ.ஐ.எம்.,கள் செயல்படத் துவங்கிவிட்டன.
திருச்சியில் மட்டும் இடப்பிரச்னை காரணமாக வகுப்புகள் துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.இந்நிலையில், பாரதிதாசன் பல்கலை வளாகத்தில், சூரியூர் அருகே, 200 ஏக்கர் நிலம், ஐ.ஐ.எம்., அமைக்க ஒதுக்கப்பட்டது. அங்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டது.
500 கோடி ரூபாய் செலவில், திருச்சி ஐ.ஐ.எம்.,க்கான கட்டமைப்பு வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.தற்காலிகமாக, வரும் கல்வியாண்டு முதல், ஐ.ஐ.எம்., திருச்சி துவாக்குடியில் உள்ள, என்.ஐ.டி.,யில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பெங்களூரு ஐ.ஐ.எம்., நிர்வாகிகளால் செய்யப்பட்டு வருகிறது.திருச்சி ஐ.ஐ.எம்.,யின் முதல் இயக்குனராக பிரபுல்லா அக்னிஹோத்ரி, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சியில் அவர் அளித்த பேட்டி: வரும் ஜூன் மாதம் முதல் திருச்சி ஐ.ஐ.எம்., செயல்படத் துவங்கும். முதலில் நிதி மேலாண்மை, விற்பனை மேலாண்மை, மனிதவள மேம்பாடு, சட்டம் மற்றும் நிதி ஆகிய பிரிவுகளில் எம்.பி.ஏ., வகுப்புகள் துவக்கப்படுகின்றன. திருச்சி ஐ.ஐ.எம்.,யில் முதலாமாண்டு, 60 மாணவர் சேர்க்கப்படுவர். அவர்கள் அனைவரும் பொது நுழைவுத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
எம்.பி.ஏ., மாணவர்களுக்கு பாடம் நடத்த, 12 பேராசிரியர்கள் தேவைப்படுகின்றனர். அவர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. பேராசிரியர் பணிக்காக, 360 பேர் விண்ணப்பித்துள்ளனர்.அவர்களில் பலர், பிரான்ஸ், பிலிப்பைன்ஸ், அமெரிக்கா, யு.ஏ.இ., ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். விண்ணப்பித்த 360 பேரில், தகுதியுடைய, 33 பேர் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதிலிருந்து, 12 நிரந்தர பேராசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த பணி இம்மாத இறுதிக்குள் முடிவடைந்து விடும். அதன் பின், மாணவர்களுக்கான அட்மிஷன் பணிகள் துவங்கும்."இந்தியப் பாதையில் உலகளாவிய பார்வை&' என்ற நோக்கத்தின் அடிப்படையில், திருச்சி ஐ.ஐ.எம்., செயல்படும். ஒரு நாடு பாரம்பரியத்தை மறந்துவிட்டால், அதன் எதிர்காலம் தொலைந்து விடும்.
ஆகையால், இங்கு பாடத்திட்டம் இந்திய தன்மையுடன் இருக்கும்.எம்.பி.ஏ., படிக்கும் மாணவர்களை தரமானவர்களாக உருவாக்கும் நோக்கில் இங்குள்ள தொழிற்சாலைகள், பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதேபோல், உள்ளூர் நிறுவனங்களின் தேவைகளை அறிந்து, அதை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய கட்டடப் பணிகள் மூன்று ஆண்டுகளில் நிறைவு பெறும். அதன்பின், அங்கு ஐ.ஐ.எம்., மாற்றப்படும். அதுவரை என்.ஐ.டி., வளாகத்தில் செயல்படவுள்ள வகுப்பு அறைகளின் தரத்தை ஐ.ஐ.எம்., தரத்துக்கு உயர்த்தும் பணிகள் நடந்து வருகின்றன.இவ்வாறு பிரபுல்லா கூறினார்.
பேராசிரியர் நியமனத்தில் புதிய முறை:இந்தியாவில் செயல்படும் அனைத்து ஐ.ஐ.எம்.,களும் துவங்கிய சில ஆண்டுகளுக்கு, ஏற்கனவே உள்ள ஐ.ஐ.எம்., பேராசிரியர்களைக் கொண்டே பாடம் நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், திருச்சியில் துவங்கவுள்ள ஐ.ஐ.எம்.,மில் தான் முதன்முறையாக இதற்காக தேர்வு செய்யப்பட்ட நிரந்தர பேராசிரியர்கள் பாடம் நடத்தவுள்ளனர்.
