வருகை சதவீதம் இல்லையெனில் தேர்வெழுத முடியாது: நீதிமன்றம்
வருகை சதவீதம் இல்லையெனில் தேர்வெழுத முடியாது: நீதிமன்றம்
UPDATED : ஏப் 24, 2011 12:00 AM
ADDED : ஏப் 24, 2011 12:10 PM
டெல்லி: போதுமான வருகைப் பதிவு சதவீதம் இல்லாமல், தேர்வு எழுதுவதை அனுமதிக்க முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிராக்டிகல் வகுப்பில் போதுமான வருகை சதவீதம் இல்லாததால், தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்ட ஒரு மாணவியின் மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது. யோகா படிப்பிற்கான மொரார்ஜி தேசாய் தேசிய கல்வி நிறுவனத்தில் ஒரு வருட டிப்ளமோ படிப்பை மேற்கொள்ளும் ஒரு மாணவி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். அதன்பொருட்டுதான் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒரு மாணவர் வகுப்பிற்கு வராமல் தேர்வெழுத நினைத்தால், அவர் ஒரு கல்வி நிறுவனத்தில் நேரடியாக சேர்ந்து படிக்க வேண்டியதில்லை. அதற்கு, திறந்தநிலை பல்கலை போன்ற வசதிகள் உள்ளன. நேரடி படிப்பில் சேர்ந்து விட்டால், குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தின் விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும். வருகை சதவீதம் மிகவும் முக்கியம். மேலும், மருத்துவ காரணங்களுக்காக கூட, வருகைப் பதிவில் விலக்கு அளிக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
தியரி மற்றும் பிராக்டிகல் வகுப்புகளில் தனித்தனியே 80% வருகைப் பதிவு முக்கியம் என்ற நிலையில், அந்த மாணவிக்கு தியரி வகுப்புகளில் 83% வருகைப் பதிவும், பிராக்டிகல் வகுப்புகளில் 69% வருகைப் பதிவும் உள்ளது. எனவே அவர் தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லை.
