மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களின் 10 சதவீத உள் இடஒதுக்கீட்டில் புது சிக்கல்!
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களின் 10 சதவீத உள் இடஒதுக்கீட்டில் புது சிக்கல்!
UPDATED : ஆக 20, 2025 12:00 AM
ADDED : ஆக 20, 2025 09:01 AM

புதுச்சேரி:
புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத உள்ஒதுக்கீட்டில் விதிமுறைகள் தெளிவாக இல்லாததால் புதுசிக்கல் இந்தாண்டு உருவாகியுள்ளது.
எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு சென்டாக் முதற்கட்ட கலந்தாய்வு நடத்தி சீட் ஒதுக்கியுள்ளது. சீட் கிடைத்த மாணவர்கள் வரும் 23ம் தேதிக்குள் கல்லுாரியில் சேர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு மருத்துவ கல்லுாரியில் அரசு பள்ளி மாணவர்களின் 10 சதவீத உள் ஒதுக்கீட்டில் சீட் கிடைத்த இரண்டு மாகி மாணவிகளின் வயது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிளஸ் 2 முடித்து பிறகு மருத்துவ கல்லுாரிகளில் சேரும் மாணவர்களின் வயது பொதுவாக 17 வயது பூர்த்தியடைந்து இருக்கும். ஆனால், மாகியில் இருந்து அரசு பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டில் தேர்வாகியுள்ள இரு மாணவிகளின் வயது முறையே 27, 31 என உள்ளது பெற்றோர் மத்தியில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி கூறுகையில், அரசு பள்ளி மாணவர்கள் அத்திபூத்தாற்போல் எப்போதாவது மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். இதனால்தான் 10 சதவித உள் ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உள்ஒதுக்கீட்டினை கேலி கூத்தாக்கும் வகையில் வயது முதிர்ந்த மாணவர்களுக்கு இந்தாண்டு 10 சதவீத அரசு பள்ளி ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது என்ன முதியோர் ஒதுக்கீடா... இது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என்றார்.
விதிகள் சொல்வது என்ன கடந்த 2023-24 கல்வியாண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கு கடைசி நேரத்தில் செப்டம்பர் 4ம் தேதி மத்திய உள்துறை அனுமதி தந்தது. அதனை தொடர்ந்து அவசரமாக 10 சதவீத ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு அமல்படுத்தப்பட்டது. அதில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு உண்டு என்று பொத்தம் பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது. வேறு நிபந்தனைகள் எதுவும் இல்லை. .
இதனால், ஏற்கனவே அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை படித்த மாணவர்கள் இப்போது நீட் தேர்வு எழுதி, அரசு பள்ளி மாணவர்களின் 10 சதவீத இட ஒதுக்கீட்டில் கீழ் சேர்ந்துள்ளனர். விதி முறைகள் தெளிவாக இல்லாத நிலையில், ஏற்கனவே அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் இனி நீட் தேர்வு எழுதி, சென்டாக் மூலம் எம்.பி.பி.எஸ்., சேர்வதை குறைசொல்லவும் முடியாது. தடுக்கவும் முடியாது. அதைத்தான் சென்டாக் செய்துள்ளது.
புதிய விதிமுறைகளை உள்புகுத்தினால் மட்டுமே தற்போது பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கிடப்பது சாத்தியமாகும். இல்லையெனில், ஒவ்வொரு ஆண்டும் வயது முதிர்ந்த மாணவர்களுக்கு தற்போது பயிலும் அரசு பள்ளி மாணவர்களின் சீட்டினை பறித்து செல்வதை வேடிக்கை தான் பார்க்க முடியும்.