தமிழ் பாடத்தை தேர்வு செய்த மாணவருக்கு ரூ.1.42 லட்சம் கடன்
தமிழ் பாடத்தை தேர்வு செய்த மாணவருக்கு ரூ.1.42 லட்சம் கடன்
UPDATED : மார் 05, 2011 12:00 AM
ADDED : மார் 05, 2011 09:59 AM
தமிழ் பாடம் தேர்வு செய்ததால் வங்கி கடன் மறுக்கப்பட்ட இன்ஜினியரிங் மாணவருக்கு, தினமலர் செய்தி எதிரொலியாக, 1.42 லட்சம் ரூபாய் கல்வி கடன் வழங்க ஐ.ஓ.பி. வங்கி முன் வந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே, பி.கீரந்தையை சேர்ந்தவர் பாலமுருகன்(18). தந்தையால் கைவிடப்பட்ட நிலையில், தாயுடன் வசித்து வருகிறார். பிளஸ் 2 தேர்வில் 819 மதிப்பெண் பெற்ற நிலையில், பட்டுக்கோட்டை ராஜா மடம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.இ., மெக்கானிக்கல்(தமிழ் பிரிவு) படிப்பில் சேர்ந்தார்.
கல்வி உதவித்தொகை கேட்டு முதுகுளத்தூரில் உள்ள வங்கி ஒன்றில் விண்ணப்பித்தும் பயனில்லை. இதனால் கலெக்டர் அலுவலக மக்கள் குறை தீர்க்கும் பிரிவில் கடந்த பிப்., 21ல் முறையிட்டார்.
அங்கிருந்த அதிகாரிகளும்," தமிழ் பாடம் தேர்வு செய்ததற்கு எப்படி கடன் தர முடியும்?' என, கூறி அனுப்பினர். மனமுடைந்த பாலமுருகன், தனது படிப்பை பாதியில் நிறுத்த முடிவு செய்தார். இது குறித்து, பிப்., 22ல், "தினமலர்' நாளிதழ் செய்தி வெளியிட்டது. செய்தி வெளியான அன்றே, மாணவருக்கு உதவி செய்ய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கீழச்செல்வனூர் ஐ.ஓ.பி., வங்கி கல்வி கடன் முன் வந்தது.
மாணவர் பாலமுருகன் கூறியதாவது: முடிந்து போன என் வாழ்க்கைக்கு "தினமலர்' வெளிச்சம் தந்துள்ளது. முதல் நாள் முறையிட்டு சென்ற நிலையில், மறுநாள் வங்கியிலிருந்து அழைப்பு வந்த போது ஆச்சரியத்தில் திகைத்தேன். எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை நான் நிச்சயம் பயன்படுத்துவேன். இவ்வாறு பாலமுருகன் கூறினார்.
