இந்தியா - இஸ்ரேல் இடையே 17 ஒப்பந்தங்கள் கையெழுத்து!
இந்தியா - இஸ்ரேல் இடையே 17 ஒப்பந்தங்கள் கையெழுத்து!
UPDATED : பிப் 27, 2026 04:40 PM
ADDED : பிப் 27, 2026 04:47 PM

ஜெருசலேம்:
இந்தியா - இஸ்ரேல் இடையே ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு, கல்வி, உற்பத்தி, கலாசாரம், கடல்சார் பாரம்பரியம், விவசாயம் என மொத்தம் 17 முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
நம் பிரதமர் நரேந்திர மோடி, இரு நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் சென்றடைந்தார். டெல் அவிவ் நகரில் தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உற்சாக வரவேற்பு அளித்தார்.
விமான நிலையத்திலேயே இரு நாட்டு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினர். இதை தொடர்ந்து பிரதமர் மோடியும், நெதன்யாகுவும் நேற்று மீண்டும் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினர்.
அப்போது இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் செயற்கை நுண்ணறிவு, கல்வி, உற்பத்தி, கலாசாரம், கடல்சார் பாரம்பரியம், விவசாயம் என மொத்தம் 17 முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதை தொடர்ந்து, இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியா - இஸ்ரேல் இடையிலான உறவு ஆழமான நம்பிக்கை என்ற வலுவான அஸ்திவாரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. சோதனை காலத்திலும் இந்த உறவு நிலைத்து நிற்கும். அதற்கு பெருமை சேர்க்கும் வகையில் இரு நாட்டு உறவை சிறப்பு ஒத்துழைப்பு என்ற கட்டத்திற்கு உயர்த்தும் வரலாற்று முடிவை எடுத்துள்ளோம். இரு நாட்டு மக்களின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ஒத்துழைப்பு என்பது வளர்ச்சி இன்ஜினாக, புத்தாக்கமாக மற்றும் பரஸ்பர வளமையாக செயல்படும். பரஸ்பர முதலீட்டை அதிகரிக்க இரு நாடுகளும், இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் கடந்த ஆண்டு கையெழுத்திட்டன. அடுத்த கட்டமாக இரு தரப்பும் பயன்பெறும் வகையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும்.
உலகில் பயங்கரவாதத்திற்கு இடம் கிடையாது என்பதில் இந்தியாவும், இஸ்ரேலும் உறுதியுடன் உள்ளன. பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும், அதனை சகித்துக் கொள்ளவே முடியாது. பயங்கரவாதத்திற்கு எதிராக இரு நாடுகளும் தோளோடு தோள் கொடுக்கும். அந்த நிலைப்பாடு தொடர்ந்து நீடிக்கும்.
இந்தியாவின் பாதுகாப்பு என்பது மேற்காசியாவின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையுடன் தொடர்புடையது. எனவே, ஆரம்பம் முதலே அமைதி பேச்சு மூலம் தீர்வு காண்பதற்கு இந்தியா ஆதரவு அளித்து வருகிறது.
பயங்கரவாத விவகாரத்தில் இந்தியாவின் சிந்தனை தெளிவானது. வன்முறைக்கு ஒரு போதும் மனிதநேயம் பலிகடாவாகிவிடக் கூடாது. காசா அமைதி ஒப்பந்த திட்டம் என்பது அமைதி பாதைக்கான திறவுக்கோல். அதற்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும். எதிர்காலத்திலும் இந்த விவகாரம் தொடர்பாக உலக நாடுகளுடன் பேச்சு நடத்தவும், அமைதி ஏற்படுத்த ஒத்துழைக்கவும் இந்தியா ஒரு போதும் தயக்கம் காட்டாது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்னவென்று, நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு நம் வெளியுறவு செயலர் மிஸ்ரி அளித்த பதில்:
அமெரிக்கா முன்மொழிந்த காசா அமைதி ஒப்பந்தத்திற்கு இந்தியா முழுதாக ஆதரவு அளிக்கும். இதை, இஸ்ரேலின் 'நெசெட்' பார்லி.,யில் பிரதமர் மோடியும் ஆணித்தரமாக தெரிவித்துள்ளார். இது, நம்பிக்கையை இழப்பதற்கான நேரம் அல்ல; நம்பிக்கையை வளர்ப்பதற்கான தருணம். இவ்வாறு அவர் கூறினார்.
திக்குமுக்காட வைத்த பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி நேற்று முன்தினம் சென்றடைந்ததும் விமான நிலையத்தில் அவருக்கு ராணுவ அணிவகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக மோடியை ஆரத்தழுவி வரவேற்ற இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அவரது சட்டைப் பையில் வைத்திருந்த கைகுட்டையின் நிறத்தையும், தன் மனைவி சாரா உடுத்தியிருந்த உடையின் நிறத்தையும் குறிப்பிட்டு காவிமயம் என பேசி, பிரதமரை திக்குமுக்காட வைத்தார். அதே போல், இரவு விருந்து நிகழ்ச்சி நடக்கும் போதும், இந்திய உடை அணிந்து வந்து பிரதமருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இஸ்ரேல் அதிபருடன் சந்திப்பு
இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக்கை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, கல்வி, புதிய தொழில் வாய்ப்புகள், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகள் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆழமாக விவாதித்தனர். மேலும் விவசாயம், நீர் மேலாண்மை போன்ற பிற துறைகளிலும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இஸ்ரேல் - இந்தியா உறவுகளை வலுப்படுத்துவதற்கு அதிபர் ஹெர்சாக் அளித்து வரும் ஆதரவுக்கு பிரதமர் மோடி, நன்றி தெரிவித்தார். மேலும், அதிபர் ஹெர்சாக்கை இந்தியாவுக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார். இந்தியாவுக்கு வரும் போது டில்லியோடு நிறுத்தாமல், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பார்வையிடுமாறு கேட்டுக் கொண்டார்.
என்னென்ன ஒப்பந்தங்கள்?
* இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிமாற்றமான யு.பி.ஐ., இனி இஸ்ரேலிலும் பயன்பாட்டுக்கு வருகிறது.
* செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் முக்கியமான தாதுக்கள் துறைகளில் கூட்டுறவு.
* முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்.
* பாதுகாப்பு துறையில் புதிய பரிணாமத்தை எட்ட முடிவு. ராணுவ தளவாடங்கள் உற்பத்தி, தொழில்நுட்பங்களை பரஸ்பரம் பகிர்ந்து கொள்வது, ஆயுதங்களை மேம்படுத்துவது.
* சிவில் அணுசக்தி மற்றும் விண்வெளித் துறையில் மேம்பட்ட கூட்டுறவு.
* இஸ்ரேல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இந்தியாவில் விவசாயத்தை மேம்படுத்த, 'உன்னத கிராமங்கள்' உருவாக்கப்படும்.
* வேளாண் உற்பத்திக்கான தொழில்நுட்பங்களை வழங்க 100 உன்னத மையங்கள் அமைக்கப்படும்.
* சைபர் தாக்குதல்களை சமாளிக்க, புதிய, 'சைபர் உன்னத மையங்கள்' உருவாக்கப்பட உள்ளன.
* கல்வி மற்றும் வணிகத் துறையில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை புகுத்த தனி ஒப்பந்தம்.
* குஜராத்தில் உள்ள பண்டைய துறைமுகமான லோத்தலில், தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை மேம்படுத்த இஸ்ரேல் தொழில்நுட்பம் வழங்கும்.
* நவீன மீன்வளர்ப்பு மற்றும் கடல்சார் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு.
யூதர்கள் நினைவிடத்தில் மோடி அஞ்சலி
இரண்டாம் உலகப் போரின் போது, ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் நாஜி படையினர் 60 லட்சம் யூதர்களை கொன்று குவித்தனர். உலகின் மோசமான இன அழிப்பு என்று இது சொல்லப்படுகிறது. போரில் கொல்லப்பட்ட யூதர்களின் நினைவாக இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில், 'யாட் வாஷெம் ஹோலோகாஸ்ட்' மையம் உள்ளது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் அங்கு சென்ற பிரதமர் மோடி, 'ஹால் ஆப் நேம்ஸ்' பகுதியைப் பார்வையிட்டார். அப்போது, நெதன்யாகு தன் மனைவி சாராவின் உறவினர்களின் பெயர்களை மோடிக்கு காட்டி விளக்கினார். பின்னர், நினைவிடத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
நெதன்யாகுவின் காதல் ரகசியம்
ஜெருசலேமில் பிரதமர் மோடியுடன் இணைந்து நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, நெதன்யாகு தன் காதல் ரகசியம் ஒன்றை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது, “இந்தியாவுக்கு நான் தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய கடன்பட்டிருக்கிறேன். என் மனைவி சாராவை முதன் முதலில் சந்தித்து பேசியது டெல் அவிவில் உள்ள ஒரு இந்திய உணவகத்தில் தான். அங்கே உணவு அற்புதமாக இருந்தது. சாரா அதை முதன் முறையாக சுவைத்தார். உணவு மட்டுமல்ல, அந்த நாள் முழுதுமே இனிமையாக இருந்தது,” என்று கூறினார்.
நெதன்யாகு குறிப்பிட்ட அந்த உணவகத்தின் பெயர் 'தந்துாரி டெல் அவிவ்'. உரிமையாளரா ரீனா புஷ்கர்ணா, நெதன்யாகு - சாரா ஜோடியின் முதல் சந்திப்பு மேஜை எண் 8ல் தான் நடந்தது என்று 2022ல் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
முக்கிய அறிவிப்புகள்
* இந்தியா - மேற்கு ஆசியா - ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை செயல்படுத்த ஆலோசனை.
* இந்தியா - இஸ்ரேலுக்கு லாபம் தரும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும்.
* இந்தியா - இஸ்ரேல் - யு.ஏ.இ., - அமெரிக்கா கூட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை.
தமிழகத்தின் உன்னத கிராமங்கள்
இஸ்ரேல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில், 'உன்னத கிராமங்களுக்காக' 100 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அந்த வகையில், ஏற்கனவே திண்டுக்கல் (தக்காளி), ஓசூர் (மலர்கள்), மற்றும் திருச்சியில் இஸ்ரேல் கூட்டுறவு மையங்கள் உள்ளன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள, 'உன்னத கிராமங்கள்' திட்டத்தின் கீழ் தமிழகத்தின் காவிரி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட, அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
