கல்லுாரி மாணவர்கள் இடையே மோதல் 18 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
கல்லுாரி மாணவர்கள் இடையே மோதல் 18 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
UPDATED : மார் 22, 2025 12:00 AM
ADDED : மார் 22, 2025 10:04 AM
சென்னை:
சென்னை சென்ட்ரலில், மோதலில் ஈடுபட முயன்ற கல்லுாரி மாணவர்கள் 18 பேரை பிடித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் கல்லுாரி மாணவர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். பயணியர் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், மோதலில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரயில்வே போலீஸ் சிறப்பு குழுக்களை அமைத்து, கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.
இதற்கிடையே, சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் நடைமேடை 12ல் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயிலில், மாநில கல்லுாரி மாணவர்கள் குழுவாக பயணிக்க காத்திருந்தனர். அப்போது, அருகில் உள்ள மற்றொரு மின்சார ரயிலில் பயணிக்க, பச்சையப்பன் கல்லுாரி மாணவர்களும் குழுவாக வந்துள்ளனர்.
திடீரென இரு கல்லுாரி மாணவர்களும், மோதலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து, அங்கிருந்த ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் கல்லுாரி மாணவர்கள் 18 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழிப்புணர்வு ஏற்படுத்தியும், கண்டுகொள்ளாமல் மாணவர்கள் மின்சார ரயில் நிலையங்களில் அடிக்கடி மோதலில் ஈடுபடுவது பயணியர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.