அனைவருக்கும் கல்வி இயக்க மருத்துவ முகாம்களால் 2,714 பேர் பயன்
அனைவருக்கும் கல்வி இயக்க மருத்துவ முகாம்களால் 2,714 பேர் பயன்
UPDATED : அக் 11, 2011 12:00 AM
ADDED : அக் 11, 2011 10:23 AM
கோவை : கோவை அனைவருக்கும் கல்வி இயக்கம் நடப்பாண்டு நடத்திய எட்டு மருத்துவ முகாம்களில் 2,714 பேர் பங்கேற்று பயன் அடைந்துள்ளனர். இவர்களில் தகுதியான மாணவர்கள் படிப்பை தொடரவும், தொழிற் பயிற்சி பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு இலவச சிகிச்சை வசதிகள் செய்து தரப்படுகின்றன. இதன் மூலம் வாழ்வில் தன்னம்பிக்கை பெறச் செய்து கல்வி அளிப்பதே திட்டத்தின் நோக்கம். கோவையில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவர்களில் சிலர், மாற்றுத் திறனாளிகளுக்கான தகுதிச் சான்றிதழ் பெறவோ, சிகிச்சை பெறவோ முன்வரத் தயங்குகின்றனர். பணவசதியுள்ள பெற்றோர், தங்கள் மாற்றுத் திறனாளி குழந்தைகளை வீட்டில் தங்க வைத்து வீட்டுக்கே நிபுணர்களை வரவழைத்து சிகிச்சை அளிக்கின்றனர். வசதி இல்லாத ஏழை பெற்றோருக்கு பிறக்கும் மூளை வளர்ச்சியற்ற குழந்தைகள் பாடு மிகவும் பரிதாபமாக உள்ளது. கவனிப்பு குறையும் வேளைகளில் இவர்கள் வீட்டில் இருந்து வெளியேறி, தெருவுக்கு வந்து விடும் அபாய நிலைமை உள்ளது. இந்த அவல நிலையை தவிர்க்கவும், மாற்றுத் திறனாளிகளுக்கும் கல்வி அளிக்கவும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. நகரின் முக்கிய பகுதிகளில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. அடையாள அட்டையோ சிகிச்சையோ தேவைப்படும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. காது கேட்காத குழந்தைகளுக்கு காதொலிக் கருவிகள் வழங்குவது, கை, கால்கள் ஊனமுற்ற குழந்தைகளுக்கு செயற்கை அவயங்கள் வழங்குவது, மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பது, கை, கால் ஊனத்தை குணப்படுத்த அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்வது போன்ற அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் பணிகளால், ஆயிரக்கணக்கான குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர். தகுதியான மாணவர்களுக்கு இலவச பயிற்சி மையங்களில் தேவையான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும் தன்னார்வ அமைப்பினர் வீடு வீடாக சென்றும் மாற்றுத் திறனாளிகளை கண்டறிவதால், நடப்பாண்டில் மட்டும் 2,714 பேர் இம்முகாம்களில் பங்கேற்று பயன் அடைந்துள்ளனர். ஆனால் வசதியற்ற பலர், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் இது போன்ற திட்டங்கள் குறித்து இன்னும் அறியாமலே உள்ளனர். இந்த ஆண்டு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து கடந்த 23ல் நடத்தப்படுவதாக இருந்த மருத்துவ முகாம், உள்ளாட்சித் தேர்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியானபின் முகாம் நடக்கும் புதிய தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும்.
