சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு: தமிழகத்தில் 300க்கும் அதிகமானோர் தேர்ச்சி
சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு: தமிழகத்தில் 300க்கும் அதிகமானோர் தேர்ச்சி
UPDATED : ஆக 04, 2013 12:00 AM
ADDED : ஆக 04, 2013 08:51 AM
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., - ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட, 24 பதவிகளில் ஏற்படும் காலி பணியிடங்களை நிரப்ப, ஆண்டுதோறும், யு.பி.எஸ்.சி., சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்துகிறது. முதல்நிலைத் தேர்வு, பிரதான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய, மூன்று தேர்வுகளின் அடிப்படையில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
முதல்நிலைத் தேர்வில், தேர்வு பெறுபவர்கள், பிரதான தேர்வுக்குச் செல்லலாம். இதில் தேர்ச்சி பெறுபவர்கள், நேர்முகத் தேர்வுக்கு செல்வர். பிரதான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், தேசிய அளவில், "ரேங்க்" பட்டியல் தயாரிக்கப்பட்டு, இறுதி பட்டியலை, யு.பி.எஸ்.சி., வெளியிடுகிறது.
பத்து ஆண்டுகளுக்கு முன் வரை, இந்த தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஜொலிக்காமல் இருந்தனர். ஆனால், சென்னையில், தரமான பல்வேறு நிறுவனங்கள், சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு, பயிற்சி அளித்து வருகின்றன.
தமிழக அரசின், அண்ணா ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் உட்பட, பல நிறுவனங்கள், சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு, பயிற்சி அளித்து வருகின்றன. இந்நிறுவனங்களில் பயிற்சி பெறும் இளைஞர்கள், சமீப காலமாக, அதிகளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.
நடப்பு ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு, கடந்த மே, 26ம் தேதி நடந்தது. 1,000 பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட இத்தேர்வை, நாடு முழுவதும், 9.8 லட்சம் பேர் எழுதினர்.
தமிழகத்தில், 136 மையங்களில் நடந்த தேர்வில், 27 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதன் முடிவு, நேற்று முன்தினம் இரவு வெளியானது. தேர்வெழுதியவர்களில், 14,959 பேர், பிரதான தேர்வுக்கு, தேர்ச்சி பெற்றுள்ளனர். பிரதான தேர்வு, வரும் டிசம்பரில் நடக்கும் எனவும், நேர்முகத் தேர்வு, வரும், 2014 மார்ச்சில் நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, 300க்கும் மேற்பட்டோர், முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர்.