புதிய பாரத எழுத்தறிவு திட்டம்: செங்கையில் 825 மையங்கள்
புதிய பாரத எழுத்தறிவு திட்டம்: செங்கையில் 825 மையங்கள்
UPDATED : செப் 04, 2023 12:00 AM
ADDED : செப் 04, 2023 08:02 AM
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில், எழுத, படிக்க தெரியாதவர்கள் பற்றிய கணக்கெடுப்பு செய்ததில், 13,247 பேர் இருப்பது கண்டறியப்பட்டது.அவர்களுக்கு, புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், கற்போர் மையங்கள் துவங்கப்பட்டு, நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை மூலம், மத்திய அரசின் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கணக்கெடுப்பு, கடந்த ஆண்டு நடந்தது. இந்த கணக்கெடுப்பு பணியில், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.இதில், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், ரேஷன் கடை, பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆகியோரிடம் தகவல் அடிப்படையில், எழுத படிக்க தெரியாத, 14,562 பேர் கண்டறியப்பட்டனர். அவர்களுக்கு கற்போர் மையம் சார்பில், தினமும் இரண்டு மணி நேரம் என, ஆறு மாத காலம் தன்னார்வலர்கள் மூலம் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இப்பயிற்சி முடித்தவுடன், அவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.அதேபோல், 2023 - 24ம் கல்வி ஆண்டில், 15 வயதிற்கு மேற்பட்ட, முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 13,239 பேருக்கு, பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அவர்களுக்கு, 825 இடங்களில், பயிற்சி அளிப்பதற்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 825 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இம்மையங்களை, முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.இத்திட்டத்தில், அடிப்படை கல்வி அறிவு, எண்ணறிவு, சிக்கலான வாழ்க்கை திறன்கள், நிதியியல் கல்வியறிவு, டிஜிட்டல் கல்வியறிவு, குழந்தைகள் பராமரிப்பு, கல்வி சுகாதார பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கூடுவாஞ்சேரி நடுநிலைப்பள்ளியில், புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்போர் மையத்தை, மாநில ஒருங்கிணைப்பாளர் ரகுராமன், நேற்று துவக்கி வைத்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மரிய அந்தோணிராஜ், வட்டார கல்வி அலுவலர் காஞ்சனா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.மாவட்டத்தில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், 825 கற்போர் மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. கற்போரான 13,247 பேருக்கு, புத்தகங்கள் வழங்கப்பட்டன. தன்னார்வலர்கள், அவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றனர். மையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன என செங்கல்பட்டு கல்வித்துறை அதிகாரிகள் கூறினார்.
