UPDATED : மே 28, 2011 12:00 AM
ADDED : மே 28, 2011 02:53 PM
ஆம், கண்பார்வை குறைவான அக்ஷயா, பிரெய்லி புத்தக முறையில் 10ம் வகுப்பு பாடங்களை படித்து, ஆசிரியரின் துணையுடன் தேர்வெழுதி இந்த மதிப்பெண்ணை பெற்றுள்ளார்.
அக்ஷயா பற்றி, அவருக்கு ஊக்கமளித்து இந்த அளவிற்கு சாதனை படைக்கக் காரணமான ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஆரோக்கிய மேரி ராய் பெருமிதத்துடன் கூறுகிறார்.
சிறு வயதிலேயே படிப்பின் மீது இவ்வளவு கவனம் செலுத்தும் ஒரு பெண்ணை நான் இதுவரை பார்த்ததே இல்லை. எங்கள் பள்ளிக்கு வந்து, மாணவர்கள் மத்தியில் உரையாற்றும்படி அக்ஷயாவைக் கேட்டுக் கொண்டுள்ளேன். அவளைப் பற்றி தெரிந்தால்தான், கஷ்டப்பட்டு படிப்பது என்பது என்னவென்று மாணவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன் என்றார்.
தேர்வு முடிவுகள் வெளியானதும், அக்ஷயா, தனது மதிப்பெண்களை தெரிந்து கொண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தார். இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து அவள் மீளவே இல்லை என்று அவளது தாய் பானுமதி நிருபர்களிடம் தெரிவித்தார்.
இன்ப அதிர்ச்சியில் இருந்து மீளாமல், ஒரு சிறு புன்னைகயுடன் நம்மிடம் பேசிய அக்ஷயா, தேர்வின்போது நான் சற்று நம்பிக்கையை இழந்திருந்தேன். சமூக அறிவியல் பாடத்தில் நான் சரியாக எழுதவில்லை என்று நினைத்து கவலைப்பட்டேன். என்னால் சாதிக்க முடியாமல் போய்விடுமோ என்று நினைத்தேன். ஆனால் நல்ல வேளையாக, எல்லாவற்றையும் கடந்து சாதித்துவிட்டேன் என்று பணிவாகக் கூறுகிறார்.
திட்டமிட்டோ, அட்டவணை தயாரித்தோ அக்ஷயா படிக்கவில்லை. அவள் எப்போதுமே புத்தகத்துடனே இருப்பாள், தூங்கச் செல்லும் போதும் அவள் புத்தகத்துடன் இருப்பதையும், நடு இரவிலும் அவள் படித்துக் கொண்டிருப்பதையும் நான் பார்த்திருக்கிறேன் என்று அக்ஷயாவின் சகோதரி நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
அக்ஷயா பதில்களை சொல்லச் சொல்ல, ஆசிரியர் ஆரோக்கிய மேரி தேர்வினை எழுதியுள்ளார். ஒரு பதிலை எழுதும் போது எதனை ஹைலைட் செய்ய வேண்டும், எங்கு புள்ளி வைக்க வேண்டும், எங்கு கமா போட வேண்டும், எந்த வார்த்தையை அன்டர்லைன் செய்ய வேண்டும் என்பது முதல் அனைத்தையும் அக்ஷயாவே சொல்வாள். இதிலிருந்தே, அவளது படிப்பு ஆர்வத்தை நாம் தெரிந்து கொள்ளலாம் என்றார்.
சாதனை படைக்க உடல் ஊனம் ஒன்றும் தடை அல்ல என ஏற்கனவே பலர் நிரூபித்திருந்தாலும், வருங்கால தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக சாதனை படைத்துள்ளார் நம் அக்ஷயா. அவரது சிறப்பான எதிர்காலத்திற்கு கல்விமலர்.காம் சார்பில் வாழ்த்துகள்.
