UPDATED : மே 29, 2011 12:00 AM
ADDED : மே 29, 2011 11:38 AM
நமது ஆரோக்கியத்திற்கு அடிப்படை காரணியாக விளங்குவது நமது உணவுமுறை. எனவே, எப்படிப்பட்ட உணவுமுறை இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக அமையும் என்பதை மாணவர்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும்.
சிலவகை உணவுகள் சிறப்பான உணவுகள் என்று அழைக்கப்படுகின்றன. அந்தவகை உணவுகள் உங்களுக்கு சாப்பிட்டவுடன் ஒரு பொலிவை தருகின்றன. மேலும் அந்தவகை உணவுகள் நம்மை சிறப்பாக சிந்திக்க தூண்டுகின்றன. நீர் மற்றும் சமைக்கப்படாத காய்கறிகள் மற்றும் பழங்கள் முக்கியமானவை.
பச்சையான பழங்கள் மற்றும் காய்கறிகள், அஜீரணக் கோளாறுகளை தீர்க்கின்றன. இவை சிறந்த சக்தியை உடலுக்கு வழங்குகின்றன. வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது சிறந்த பயனைத் தரும். ஏனெனில் பழங்கள், உடனடியாக ஜீரணிக்கப்பட்டு சிறந்த ஆற்றலை உடலுக்கு தருகின்றன. ஒரு வாழைப்பழமானது, 5 செட் டென்னிஸ் விளையாடுவதற்கான சக்தியை தருகிறது. மேலும் ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும், பச்சை காய்கறிகளைக் கொண்ட "சாலட்" இருப்பது மிகவும் சிறந்தது.
கொட்டை வகைகளை எடுத்துக்கொண்டால், முந்திரி பருப்பு மற்றும் நிலக்கடலை பருப்பு மிகவும் சிறந்த உணவுகள். இவற்றில் ஏராளமான சத்துப் பொருட்கள் இருக்கின்றன. உங்களின் மூளை புரோட்டீனால் ஆக்கப்பட்டுள்ளது. மேலும் பயறு வகைகளும் சிறந்த உணவு. இவற்றின் மத்தியில் இன்னுமொரு முக்கிய உணவு என்னவெனில் முட்டை. மாணவர்கள் முட்டையை அவ்வப்போது சேர்த்துக் கொள்ளுதல் மிகவும் அவசியம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ஒரு முக்கிய உணவு வகை என்னவெனில், ஊற வைத்த கொட்டைகள் மற்றும் தானியங்கள். இந்த வகை உணவுகள், எப்போதுமே துடிப்புடன் இருப்பதற்கான சக்தியையும் தருகின்றன. நீங்கள் படிக்கும்போது, அவ்வப்போது சிறிய அளவிலான உணவை உட்கொள்ளவும். இதனால், தூக்கத்திலிருந்து தப்புவதுடன், உடலுக்கும் தொடர்ந்து உணவு கொடுத்ததுபோல் இருக்கும்.
மேற்சொன்ன உணவு முறைகளை முடிந்தளவு சிறப்பாக கடைபிடித்தால், உடல் ஆரோக்கியம் பேணப்பட்டு, நல்ல மாணவராக உங்களால் திகழ முடியும்.
