UPDATED : ஜூன் 02, 2011 12:00 AM
ADDED : ஜூன் 02, 2011 10:17 AM
மாநகராட்சி பள்ளிகளில் நடப்புக் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நேற்று துவங்கியது. சென்னை மாநகராட்சிக்கு சொந்தமாக 281 பள்ளிகள் உள்ளன. இதில், 67 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும், மீதம் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், 69 பள்ளிகளில் எல்.கே.ஜி., மற்றும் யூ.கே.ஜி., வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் 3,500 மாணவர்கள் படிக்கின்றனர்.
இம்மாதம் 15ம் தேதி பள்ளிகள் துவங்கும் நிலையில், மாணவர் சேர்க்கை நேற்று துவங்கியது. வால்டாக்ஸ் சாலை மாநகராட்சி பள்ளியில், மாணவர் சேர்க்கையை மேயர் சுப்ரமணியம் துவக்கி வைத்தார். பள்ளி திறக்கப்படும் 15ம் தேதி வரை, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதற்காக, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எல்.கே.ஜி., முதல் 11ம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். மாணவர் சேர்க்கை குறித்து, மேயர் சுப்பரமணியன் கூறும்போது, "புதிய மாணவர்கள் மட்டுமல்லாது, பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டவர்களும் தொடர்ந்து படிக்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.
10வது மற்றும் பிளஸ் 2 தேர்வில் மாநகராட்சிப் பள்ளிகள் 86 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், மாநகராட்சிப் பள்ளிகளில் சேர மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். தற்போது, ஒரு லட்சத்து 3,000 மாணவர்கள் மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கின்றனர். இந்த எண்ணிக்கை, நடப்பாண்டில் அதிகரிக்கும்" என்றார்.
