தனித்தேர்வு மாணவர்கள் விண்ணப்பம் அளிப்பதில் சிக்கல்
தனித்தேர்வு மாணவர்கள் விண்ணப்பம் அளிப்பதில் சிக்கல்
UPDATED : ஜூன் 03, 2011 12:00 AM
ADDED : ஜூன் 03, 2011 11:10 AM
பத்தாம் வகுப்பு உடனடி தேர்வுக்கு, தனித்தேர்வு மாணவர்கள் விண்ணப்பம் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒன்று முதல் 3 பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு, உடனடி தேர்வு இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்காக விண்ணப்பங்களை இன்று மாலைக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என பள்ளி, கல்வித் துறை அறிவித்துள்ளது.
பள்ளிகளில் தேர்வு எழுதி, ஒன்று முதல் 3 பாடங்களில் தோல்வியடைந்தவர்கள், பள்ளி மூலமே விண்ணப்பிக்க முடியும். இதையடுத்து, பள்ளி நிர்வாகம், தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவியருக்கு உடனடி தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பங்களை தயார் செய்து, அனுப்பி விட்டது.
ஆனால், தனித் தேர்வு எழுதும் மாணவர்கள், இந்த உடனடி தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தேர்வு எழுதி, தோல்வியடைந்தவர்கள், மீண்டும் இந்த உடனடி தேர்வு எழுதலாம். இதற்காக, அவர்கள் கடைசியாக படித்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் கையெழுத்து வாங்கி விண்ணப்பிக்க வேண்டும்.
தற்போது, தமிழகம் முழுவதும் பள்ளிகள் அனைத்தும் வரும் 15ம் தேதி தான் திறக்கப்படவுள்ளது. இதற்காக, பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தலைமை ஆசிரியர்கள் யாரும் வரவில்லை.
இதன் காரணமாக, உடனடி தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய, தனித்தேர்வு எழுதும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் கையெழுத்து வாங்க முடியாததால், விண்ணப்பம் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
