UPDATED : ஆக 14, 2011 12:00 AM
ADDED : ஆக 14, 2011 11:04 AM
தமிழகத்தில், 1998-ல் 60 கல்லூரிகள் இருந்தன. ஆனால் இப்போது 22 கல்லூரிகளே உள்ளன. இதில், சென்னை கே.கே.நகர், திருச்சி ஆகிய இரு இடங்களில் மட்டும் அரசு கல்லூரிகள் உள்ளன. மற்றவை தனியார் கல்லூரிகள். மேலும், தமிழகத்தில் பிசியோதெரபிஸ்டுகளுக்கு தனியாக மாநில கவுன்சில் இல்லாததால், அங்கீகாரத்தை முறைப்படுத்துவது, வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெறுவது உட்பட பல்வேறு வழிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கவுன்சில் இல்லாததால், போலி பிசியோதெரபிஸ்டுகள் பெருகுவதை கட்டுப்படுத்த முடியவில்லை.
பக்கவாதம், முகவாதம், தண்டுவடம் போன்ற நரம்பியல் நோய்கள், மூட்டுவலி, கழுத்து வலி, எலும்பு முறிவு, தசைப் பிடிப்பு போன்ற எலும்பியல் நோய்கள் உட்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இயல்முறை மருத்துவம்(பிசியோதெரபிஸ்ட்) முக்கிய பங்கு வகிக்கிறது.
1988ம் ஆண்டில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகம் பிசியோதெரபிஸ்ட் நான்கரை ஆண்டு படிப்பை அறிமுகப்படுத்தியது. தமிழகத்தில் ஆண்டுதோறும் 1,000 பேர் பிசியோதெரபிஸ்ட் பட்டம் பெறுகின்றனர். இதுவரை, 20 ஆயிரம் பேர் பட்டம் பெற்றுள்ளனர். ஆனால் அரசு மருத்துவமனைகளில் 200க்கும் குறைவான பணியிடங்களே உள்ளன. பெரிய மருத்துவமனைகளில் மட்டுமே பிசியோதெரபிஸ்டுகள் நியமிக்கப்படுகின்றனர்.
தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிசியோதெரபிஸ்டுகள் இல்லாததால், கிராம மக்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை கிடைப்பதில்லை. எனவே, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தாலுகா மருத்துவமனைகளிலும் பிசியோதெரபிஸ்டுகளை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்த நிலையில், பிசியோதெரபிஸ்டுகளின் அங்கீகாரத்தை முறைப்படுத்த, பிசியோதெரபி கவுன்சில் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. மாநில அளவில் கவுன்சில் அமைக்கப்படும் என கடந்த ஆட்சியில், 2007ம் ஆண்டு சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆட்சி முடியும் வரை, கவுன்சில் அமைக்கப்படவில்லை. உள்நாட்டில் பிசியோதெரபிஸ்டுகளுக்கு வேலை வாய்ப்பு குறைவாக உள்ளது. வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற வேண்டுமானால், மாநில பிசியோதெரபி கவுன்சிலின் அங்கீகாரம் அவசியம்.
இப்போது கவுன்சில் இல்லாததால் வெளிநாடுகளில் வேலை பெறுவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. மேலும், பிசியோதெரபிஸ்டுகள் தங்களது பெயருக்கு முன், டாக்டர் என போட்டுக் கொள்ள &'அலோபதி&' டாக்டர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால், பிற மாநிலங்களில் பிசியோதெரபிஸ்டுகள், தங்கள் பெயருக்கு முன், டாக்டர் என போட அனுமதிக்கப்படுகின்றனர் என பிசியோதெரபிஸ்டுகள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும், உரிய அங்கீகாரம் வழங்கவும் மாநில பிசியோதெரபி கவுன்சில் அமைக்கப்பட வேண்டும் என அவர்கள் கோரி வருகின்றனர்.
இந்திய பிசியோதெரபிஸ்ட் நல சங்க தலைவர் விஜய் ஆனந்த் கூறியதாவது, &'தமிழகத்தில் பிசியோதெரபிஸ்டுகளின் சராசரி மாத வருமானம் 5,200 ரூபாய் முதல் 15,200 ரூபாய் வரையே உள்ளது. அரசு வேலை வாய்ப்பு இல்லாததாலும், தனியார் மருத்துவமனைகளில் குறைவான வருமானம் கிடைப்பதாலும் வேறு வேலைகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பிசியோதெரபி படிப்புக்கு போதிய வரவேற்பில்லாததால் பல பிசியோதெரபி கல்லூரிகள் தற்போது மூடப்பட்டு வருகின்றன. இதனால், பிசியோதெரபி சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க திறமையான பிசியோதெரபிஸ்டுகள் இல்லாத நிலை உருவாகும்.
சில தனியார் மருத்துவமனைகளில் நர்சுகள் மற்றும் முறையாக பிசியோதெரபி பட்டம் பெறாதவர்களை கொண்டு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது நோயாளிகளின் உயிருக்கே ஆபத்தாகிவிடும். இதை கட்டுப்படுத்தவும், போலி பிசியோதெரபிஸ்டுகளை தடுக்கவும் கவுன்சில் விரைவில் அமைக்கப்பட வேண்டும். கடந்த ஆட்சி காலத்தில் பிசியோதெரபிஸ்டுகள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்தன. நியமனங்கள் பற்றிய விவரங்கள் இணையதளத்திலோ அல்லது மருத்துவ சேவை இயக்குனர் அலுவலகத்திலோ வெளியிடப்படவில்லை. எனவே, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், வேலை வாய்ப்பு பணி மூப்பு அடிப்படையில் பிசியோதெரபிஸ்டுகள் நியமிக்கப்பட வேண்டும்&' என்று கூறினார்.
