UPDATED : செப் 09, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
பேரூர்: ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படிக்க சீட் கிடைத்தும், ‘பீஸ்’ கட்ட முடியாமல் ஏழை மாணவி தவித்து வருகிறார்.
தொண்டாமுத்தூர் அருகேயுள்ள குப்பேபாளையம் ஆதிவாசி காலனி பகுதியைச் சேர்ந்தவர் வள்ளி(17); தொண்டாமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்துள்ளார்.
சூலூர் அருகேயுள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளியில் விண்ணப்பித்திருந்தார். பிளஸ் 2 தேர்வில் வள்ளி எடுத்த மதிப்பெண் 669 ஆக இருந்தாலும், தாழ்த்தப்பட்ட(எஸ்.டி.,)வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் கவுன்சிலிங் மூலம் சீட் கிடைத்தது. இருப்பினும், ஆசிரியர் பயிற்சி பள்ளி நிர்வாகம், கல்விக் கட்டணமாக இரண்டு ஆண்டுக்கு ரூ. 80 ஆயிரம் செலுத்தக் கோரியது.
ஏற்கனவே தந்தையை இழந்துவிட்ட வள்ளியால் பெரிய தொகையை இயலவில்லை. இதனால், ஆசிரியர் படிப்புக்கு இடம் கிடைத்தும் படிக்க முடியாமல் தவித்து வருகிறார். பணம் கட்ட முடியாவிட்டால் ஆசிரியர் வேலை, வெறும் கனவாகி விடும் என்பதால், அம்மாணவி பிறர் உதவியை எதிர்பார்த்துள்ளார்.
இதுகுறித்து வள்ளி கூறுகையில், “ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், ஆசிரியர் ஆக ஆசைப்பட்டேன். ஆசிரியர் பயிற்சி பள்ளியில் வாய்ப்பு கிடைத்தும், என்னால் கல்விக் கட்டணம் செலுத்த முடியவில்லை. யாராவது உதவினால் மிகுந்த உதவியாக இருக்கும்,” என்றார்.