‘செயல்வழி கற்றல் பாடம் நடத்துவதை நிறுத்திவிட்டோம்’
‘செயல்வழி கற்றல் பாடம் நடத்துவதை நிறுத்திவிட்டோம்’
UPDATED : செப் 09, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கடலூர்: செயல்வழி கற்றல் முறையில் பாடம் நடத்துவதை நிறுத்தி விட்டோம் என தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் அப்துல் மஜித் கூறினார்.
கடலூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
விழுப்புரத்தில் கடந்த 6ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டோம். அரசிடமிருந்து முறையான பதில் கிடைக்காததால் சாலை மறியல் செய்ய முற்பட்டோம். அதற்குள் கலெக்டர் எங்களை அழைத்து பேசினார்.
கல்வி அமைச்சர் செப்., 9ம் தேதி எங்களை சந்தித்து பேசுவதாக உள்ளார். இதனால் போராட்டத்தை தள்ளி வைத்துள்ளோம். பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம் தொடரும்.
தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் செயல் வழி கற்றல் முறையில் பாடம் நடத்துவதில்லை என முடிவெடுத்து 8ம் தேதி முதல் ஒட்டுமொத்தமாக நிறுத்தி விட்டோம்.
தமிழகத்தில் மாநகராட்சி பள்ளிகளை பொறுத்தவரை, சென்ற ஆண்டில் 63 பள்ளிகளும், இந்த ஆண்டு 18 பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இன்னும் 120 பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளது.
ஊராட்சிகளில் ஆயிரத்து 200 பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இன்னும் ஆயிரத்து 300 பள்ளிகள் மூடும் அபாயம் உள்ளது.
எங்கள் குறைகள் இப்படியிருக்க இன்ஜினியரிங் கல்லூரி துவக்க விழா நிகழ்ச்சி ஒன்றில் உயர் கல்வித் துறை அமைச்சர் பேசும் போது, சங்கங்களை வளர்க்கத்தான் போராட்டங்கள் நடத்துகின்றனர் என தெரிவித்துள்ளார்.
கட்சிகள் வேண்டுமானால் போராட்டம் நடத்தினால் வளரும். ஆனால் சங்கங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினால் இருப்பவர்களும் இல்லாமல் போய் விடுவார்கள். மேலும் உங்களுக்கெல்லாம் ஜெயலலிதா தான் சரியான ஆள் என கூறுகிறார். அமைச்சர் இதுபோன்று எங்களை விமர்சனம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அப்துல் மஜித் கூறினார்.