UPDATED : அக் 29, 2011 12:00 AM
ADDED : அக் 29, 2011 09:56 AM
பாலிடெக்னிக் மற்றும் அரசு கல்லூரிகளின் பகுதி நேர ஆசிரியர்களுக்கான சம்பளம், அதிகபட்சமாக, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு பாலிடெக்னிக் மற்றும் சிறப்பு மையங்களில், பகுதி நேர பட்டயப் படிப்புகளில் (மாலை நேர கல்லூரிகள்) பாடம் எடுக்கும், பகுதி நேர ஆசிரியர்களுக்கு, பாடம் நடத்த 1 மணி நேரத்துக்கு, 100 ரூபாய் வீதமும், செய்முறை வகுப்புகளுக்கு, 1 மணி நேரத்துக்கு 50 ரூபாய் வீதமும், அதிகபட்சமாக மாதத்துக்கு, 4,000 ரூபாய் சம்பளமாக வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. கடந்த 2009-10ம் ஆண்டில், 14 அரசு கல்லூரிகளில், ஷிப்ட் முறையில் வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த வகுப்புகளை எடுக்கும், பகுதி நேர விரிவுரையாளர்களுக்கு, பாடம் நடத்த 1 மணி நேரத்துக்கு, 150 ரூபாய் வீதமும், செய்முறை வகுப்புகளுக்கு 1 மணி நேரத்துக்கு, 100 ரூபாய் வீதமும், மாதம் அதிகபட்சமாக, 6,000 ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், இந்த தொகை மிகவும் குறைவாக உள்ளதால், பாடங்கள் நடத்த பாட வகுப்புகளுக்கு, 1 மணி நேரத்துக்கு 250 ரூபாய் வீதமும், செய்முறை வகுப்புகளுக்கு 1 மணி நேரத்துக்கு, 150 ரூபாய் வீதமும் வழங்க வேண்டுமென, பகுதி நேர ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை மனு அளித்தனர். இதை பரிசீலித்த, அரசின் தொழில்நுட்பக் கல்வி கமிஷனர், பாட வகுப்புகளுக்கு 1 மணி நேரத்துக்கு, 200 ரூபாய் வீதமும், செய்முறை வகுப்புகளுக்கு 1 மணி நேரத்துக்கு, 100 ரூபாய் வீதமும், அதிகபட்சமாக மாதம், 15 ஆயிரம் ரூபாய் வரை வழங்கலாம் என, அரசுக்கு பரிந்துரைத்திருந்தார். இதை பரிசீலித்த தமிழக அரசு, பாலிடெக்னிக்குகள், சிறப்பு மையங்கள் மற்றும் ரெகுலர் வகுப்புகள், ஷிப்ட் முறை வகுப்புகள், மாலை நேர படிப்புகள் என அரசு கல்லூரிகளில் பாடம் எடுக்கும் பகுதி நேர விரிவுரையாளர்களுக்கான சம்பளத்தை உயர்த்தியுள்ளது. இதன்படி, பாட வகுப்புகளுக்கு 1 மணி நேரத்துக்கு 200 ரூபாயும், செய்முறை வகுப்புகளுக்கு 1 மணி நேரத்துக்கு 100 ரூபாயும், அதிகபட்சமாக மாதம் 10 ஆயிரம் ரூபாயும் வழங்க, உயர்கல்வித் துறை செயலர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
