UPDATED : நவ 06, 2011 12:00 AM
ADDED : நவ 06, 2011 10:48 AM
எனவே, ஒரு சில முக்கிய நாடுகளில் உள்ள விசா நடைமுறைகளைப் பற்றிய தகவல்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.
இத்தாலி
செப்டம்பரில் வகுப்புகள் துவங்கும். குறைந்தபட்சம் நான்கு மாதங்களுக்கு முன்னரே விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பது உசிதம். பயணத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். நாகரிகத்தின் மெக்கா என்றுதான் அறியப்படுகிறது இத்தாலி. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் பேஷன், டிசைன், இன்ஜினியரிங், வணிகமேலாண்மை துறைகளில் உயர்கல்வி பயில்கின்றனர்.
இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சகம் கல்வி உதவித்தொகைகளை வழங்குகிறது. இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, ஆங்கில மொழியில் பாடத்திட்டங்களை அதிகளவில் வழங்க இத்தாலிய கல்வி நிறுவனங்கள் முயன்று வருகின்றன.
விசா நடைமுறை
வடஇந்திய மாணவர்கள் டெல்லியில் உள்ள இத்தாலிய தூதரகத்தை அணுகலாம். மும்பை, கொல்கத்தாவில் உள்ள அரசமைப்புக் கிளைகள் முறையே தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு இச்சேவையை வழங்குகின்றன.
விசா விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட், வெளிநாடுகளில் செல்லத்தக்க மருத்துவக் காப்பீடு, குடியிருப்புச் சான்று, பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட ஏற்புக் கடிதம், கல்விக் கட்டணத்தை முழுமையாகச் செலுத்தியதற்கான ரசீது, இத்தாலியில் தங்குமிடத்துக்கான சான்று போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
நியூசிலாந்து
செப்டம்பர், அக்டோபரில் வகுப்புகள் துவங்கும். நான்கு மாதங்களுக்கு முன் விண்ணப்பிப்பது நலம். பத்து மாதங்களுக்கு முன்பே விசாவுக்கு விண்ணப்பித்து விடவும். நியூசிலாந்தில் 2009ல் 7,000 இந்திய மாணவர்களும், 2010ல் 8,000 மாணவர்களும் பயின்றனர். இளநிலைப் பட்டங்களுக்காக நியூசி., செல்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. பிரிட்டன் மற்றும் அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் நியூசி.,யில் உயர்கல்விக்கான செலவு சொற்பமே. வணிகம், மருத்துவம், மேலாண்மை, தகவல் தொழில்நுட்ப பிரிவுகளில் இந்திய மாணவர்கள் அதிகம் சேர்கின்றனர்.
படிப்பு முடிந்த உடன், ஓராண்டுக்கு விசா நீட்டிக்கப்படுகிறது; வேலை தேடுவதற்கான வாய்ப்பு இது. இரண்டு ஆண்டுகளுக்கு பணிக்கால விசாவும் வழங்கப்படுகிறது. இந்திய பருவகாலத்துக்கும், நியூசி.க்கும் நிறைய மாறுபாடுகள் உண்டு.
விசா நடைமுறை
விசா விண்ணப்பத்துடன், பல்கலைக்கழக ஏற்புச் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். கல்விக்கட்டணம் செலுத்திய ரசீது, பாஸ்போர்ட், நிதிஆதாரம், குடியிருப்பு ஆதாரம் போன்ற ஆவணங்களும் இணைத்தல் அவசியம்.
மருத்துவப் பரிசோதனை, எக்ஸ்-ரே போன்றவையும் சரிபார்க்கப்படும். விசா அனுமதி வழங்கப்பட்ட பின், உங்களின் பாஸ்போர்ட் நியூசிலாந்து சென்ற மூன்றுமாதங்களுக்குள் காலாவதி ஆகி விடக்கூடாது.
சிங்கப்பூர்
ஆகஸ்ட்டில் வகுப்புகள் துவங்கும். மார்ச் இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு மாதங்களுக்கு முன் அதேசமயம் ஆறுமாதங்களுக்கு மிகைபடமால் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதர வளர்ந்த நாடுகளைக்காட்டிலும் சிங்கப்பூரில் வாழ்வுச் செலவினங்கள் குறைவு. பணிக்கான விசா இல்லாமலேயே மாணவர்கள் வாரத்துக்கு 16 மணி நேரம் பணிபுரியலாம். சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களே விசா பெறுவதில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குகின்றன.
விசா நடைமுறை
அங்கு பயில்வதற்கு மாணவர்கள் நுழைவுச்சீட்டு பெற வேண்டும். இல்லாவிடில் ‘DP’ எனப்படும் ’Dependent pass’ அல்லது ’Imigration exemption order&' பெற வேண்டும்.
பல்கலைக்கழகத்தில் இருந்து ஏற்புச் சான்றிதழ் பெற்றவுடன், குடியமர்வு அதிகாரிகளிடம் அதைச் சமர்ப்பிக்க வேண்டும். விசா அனுமதிக்கப்பட்ட பின், ஏற்புக் கடிதம், மாணவர் அனுமதிப் படிவத்தைப் பூர்த்தி செய்து, பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும். பல்கலைக்கழகம் அதுசார்ந்த நடவடிக்கைகளை தன்நாட்டில் தொடரும். மாணவர் அனுமதிச் சீட்டு கிடைத்துவிட்டது குறித்த தகவலைப் பல்கலைக்கழகம் உங்களுக்கு அனுப்பும்.
சுவிட்சர்லாந்து
செப்டம்பரில் வகுப்புகள் துவங்கும். நான்கு மாதங்களுக்கு முன்பாக விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும். பயணத்துக்கு 10 வாரங்களுக்கு முன் விசா நடைமுறை துவங்கும்.
கடந்த 2010 டிசம்பரில் இந்தியாவில் இருந்து 700 மாணவர்கள் சுவிட்சர்லாந்துக்குப் படிப்புக்காகச் சென்றுள்ளனர். இதர ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கு கல்விக்கட்டணம் குறைவு. பயிலும் போதே பணிபுரிவதற்கான வாய்ப்புகள் இங்கு குறைவே.
விசாநடைமுறை
மூன்று படிவங்களைப் பூர்த்தி செய்து, சமீபத்தில் எடுக்கப்பட்ட மார்பளவு புகைப்படங்கள் நான்கு, பாஸ்போர்ட் நகல், பல்கலைக்கழகத்தின் உறுதி செய்யப்பட்ட கடிதம், கல்விக்கட்டணம் செலுத்திய ரசீது, கல்வித்தகுதிச் சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். படிப்பு முடிந்த உடன் சுவிஸ் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கான உத்தரவாதக் கடிதத்துடன், அவரின் எதிர்காலத் திட்டம் பற்றிய சிறு வரைவும் இணைக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு நாடும் வெவ்வேறு விதமான விசா நடைமுறைகளை வைத்திருக்கின்றன. சிற்சில வேறுபாடுகள் என்ற போதும் அவற்றைக் கவனமாகப் பின்பற்ற வேண்டும். மாணவர்களுக்கான விசா மறுக்கப்படாது என்ற போதும், ஒரு முறை மறுக்கப்பட்டால் மீண்டும் பெறுவது கடினம் என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.
