UPDATED : நவ 14, 2011 12:00 AM
ADDED : நவ 14, 2011 10:26 AM
திருவள்ளூர் : சென்னை, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்காக, ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம், ஆவடி வீராபுரத்தில், 15ம் தேதி முதல், 20ம் தேதி வரை நடக்கிறது. இந்திய ராணுவத்தில், சிப்பாய், கிளர்க், ஸ்டோர் கீப்பர், நர்சிங் உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு, ஆட்கள் தேர்வு, ஆவடி வீராபுரத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை பயிற்சி மையத்தில் நடக்கிறது. வரும், 15ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை, இம்முகாம் நடக்கிறது. திருவள்ளூர், வேலூர், கடலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் சென்னை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், புதுச்சேரியைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளலாம். சிப்பாய் பொதுப் பணிக்கு, 17 வயது 6 மாதங்கள் முதல், 21 வயது வரையிலும், சிப்பாய் டெக்னிக்கல் நர்சிங் உதவியாளர், வர்த்தகப் பணி, கிளர்க், ஸ்டோர் கீப்பர், டெக்னிக்கல் பணியிடங்களுக்கு, 17 வயது 6 மாதங்கள் முதல், 23 வயது வரை இருக்க வேண்டும். அதாவது, 1988 நவம்பர் 15 முதல், 1994 மே 15ம் தேதிக்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். தங்களது அசல் கல்விச் சான்றிதழ்களுடன், தாசில்தாரிடம் பெற்ற இருப்பிடச் சான்றதழ், வீட்டு முகவரி, அசல் மாற்று சான்றிதழ், மாவட்ட கல்வி அதிகாரியால் சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும். படிப்பு மற்றும் நடத்தைச் சான்றிதழ், கடைசியாகப் படித்த கல்வி நிறுவனம் மற்றும் கிராம நிர்வாக அதிகாரியிடமிருந்து பெற்றிருக்க வேண்டும். ராணுவத்தில் சேர விருப்பமுள்ளவர்கள், தங்களது அசல் கல்விச் சான்றிதழ், புகைப்படங்களுடன், தினசரி காலை 5 மணிக்குள் ஆஜராக வேண்டும்.மேற்கண்ட தகவலை, திருவள்ளூர் கலெக்டர் ஆஷிஷ் சட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
