UPDATED : நவ 15, 2011 12:00 AM
ADDED : நவ 15, 2011 11:16 AM
நாமக்கல்: அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுகள் வழங்கப்படுகிறது.
அதற்கான அறிவியல் கண்காட்சி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நேற்று நடந்தது. நாமக்கல் மாவட்ட அரசு மேல்நிலை, உயர் நிலை மற்றும் ஊராட்சி துவக்கப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வரை படிக்கும் மாணவர்களிடையே அறிவியல் மேற்படிப்பு மேற்கொள்வதற்கு ஊக்குவிக்கும் வகையில், "புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுகள்" (இன்ஸ்பயர்) என்ற திட்டத்தை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குனரகம் சார்பில், ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.
அதன்படி, 2011-12ம் கல்வி ஆண்டில், நாமக்கல் மாவட்டத்தில் அரசு மேல்நிலை, உயர்நிலை, நிதிஉதவி பெறும் பள்ளிகள், சுயநிதிப்பள்ளிகள் மற்றும் ஊராட்சி துவக்கப்பள்ளிகளில் பயிலும், 375 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா, 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இத்தொகையை பயன்படுத்தி, மாணவர்கள் அறிவியல் ஆய்வுகள் மேற்கொண்டு உருவாக்கிய படைப்புகளின் கண்காட்சி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. கண்காட்சியை, சி.இ.ஓ., (பொறுப்பு) பத்மாவதி துவக்கி வைத்தார். இக்கண்காட்சியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி மற்றும் ஊராட்சி துவக்கப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியர், 375 பேர் பங்கேற்று, தங்களது அறிவியல் படைப்புகளை இடம் பெறச்செய்திருந்தனர்.
அதில், சாயக்கழிவுகளால் நிலம் மாசுபடுவதும், அதை சுத்திகரிப்பு செய்து மீண்டும் பயன்படுத்தும் முறை குறித்த செயல்விளக்கம், கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது. மேலும், புவி வெப்பமயமாவதை தடுத்தல், சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சும் முறை, சோலார் சிட்டி, பசுமை வீடு திட்டம், ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வரும்போது விபத்தை தடுப்பதற்கான முறை, சோலார் மின் ஒளியை பயன்படுத்தி விமானம், கப்பல் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு படைப்புகள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கண்காட்சியை, நாமக்கல் சுற்று வட்டாரத்தில் உள்ள பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட ஏராளமானோர் பார்த்து மகிழ்ந்தனர்.
