UPDATED : செப் 13, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கேம்கார்டர், எல்.சி.டி. புரொஜக்டர்கள், கம்ப்யூட்டர் லேப், ஜென்செட் என நவீன வசதிகள் நமது அரசுப் பள்ளிகளில் பார்க்கும் நாள் தூரத்தில் இல்லை என்றே தெரிகிறது.
இவை எல்லாவற்றையும் விட ஒரு லட்சம் புதிய ஆசிரியர்களும் பணிக்கு எடுத்துக் கொள்ளப்படவிருப்பதாக மத்திய மனித வள அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரூ.6 ஆயிரம் கோடிக்கு திட்டவரைவை அமைச்சகம் தயாரித்துள்ளது.
இதன்படி, பள்ளிக் குழந்தைகள் வேர்ட் பிராசசிங், பவர் பாயிண்ட், ஸ்பிரெட்ஷிட் ஆகியவற்றில் பயிற்றுவிக்கப்படுவார்கள். நாட்டிலுள்ள 1.8 லட்சம் செகண்டரி மற்றும் ஹையர் செகண்டரி பள்ளிகளில் 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் இது செயல்படுத்தப்படும்.
ஏற்கனவே நாட்டிலுள்ள சுமார் 20 ஆயிரம் பள்ளிகளில் ரூ.500 கோடி செலவில் ஆய்வகங்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. இது போன்ற மேம்பாட்டுச் செலவில் 75% செலவை மத்திய அரசும் 25% செலவை அந்தந்த மாநில அரசும் ஏற்றுக்கொள்ளும். இந்தத் திட்டத்தின் படி ஒவ்வொரு பள்ளியும் ஆண்டுக்கு ரூ.7.65 லட்சம் நிதி உதவியைப் பெறவிருக்கின்றன.
திறம் பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு செயல்படுத்தப்படவிருக்கிறது. இதன்படி ஒவ்வொரு ஆசிரியரும் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் பெறுவர். இவர்கள் 9 முதல் 12 வரையிலான வகுப்புகளை நடத்துவர்.
இது போன்ற அரசுத் திட்டம் அறிவிக்கப்பட்டவுடன் தரமில்லாத உபகரணங்களையும், பொருட்களையும் சப்ளை செய்ய இந்த டெண்டர்களுக்காகக் காத்திருக்கும் எண்ணற்ற புரோக்கர்களும், சப்ளையர்களும் இதிலும் நுழையாமலிருந்தால் சரி.