தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அமெரிக்காவில் இயற்கை முறை விவசாயத்துக்கு மவுசு!

அமெரிக்காவில் இயற்கை முறை விவசாயத்துக்கு மவுசு!

அமெரிக்காவில் இயற்கை முறை விவசாயத்துக்கு மவுசு!


UPDATED : செப் 24, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 24, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


கோவை:
“அமெரிக்காவில் பெரும்பான்மையான விவசாயிகள் இயற்கை முறை விவசாயத்தை கடைபிடிக்கின்றனர். அங்குள்ள நிலங்களில் ரசாயன உரங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதில்லை,” என, கார்னல் பல்கலை சென்று வந்த கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள கார்னல் பல்கலையுடன், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை, ஐதராபாத்தில் உள்ள ஆந்திரா வேளாண் பல்கலை, கர்நாடகா மாநிலத்தில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலை, உத்ராஞ்சல் மாநிலத்தில் உள்ள ஜி.பி., பந்த் வேளாண் பல்கலை ஆகியவை  புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
இதன்படி, கார்னல் மற்றும் மற்ற வேளாண் பல்கலையைச் சேர்ந்த 21 மாணவ, மாணவியர், ‘சர்வதேச வேளாண்மையும், ஊரக மேம்பாடும்’ என்ற பாடத்தை ஆறு மாதம் படிக்க வேண்டும். இதன் ஒரு பகுதியாக கார்னல் பல்கலையில் 15 நாட்கள் படிக்க வேண்டும்.
இந்தியாவில் உள்ள நான்கு வேளாண் பல்கலையில் இருந்து 21 மாணவ, மாணவியர்  செப்.,2ம் தேதி, கார்னல் பல்கலைக்கு கிளம்பி சென்றனர். இவர்கள், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய முறைகளையும், படிப்புக்களையும் அறிந்து கொண்டனர். அங்கு 15 நாள் பாடத்தை முடித்துக் கொண்டு, தங்களது வேளாண் பல்கலைக்கு அனைத்து மாணவர்களும் கடந்த 21ம் தேதி வந்து சேர்ந்தனர்.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் இருந்து கார்னல் பல்கலை சென்று திரும்பிய முதுநிலை பட்டப்படிப்பு படித்து வரும் மாணவியர் கயல்விழி, அர்ச்சனா, சத்யா, கார்த்திகாயினி, தனஜெயந்தி, ரேவதி,  ஆனந்தி மற்றும் மாணவர் ஜெய் ஸ்ரீதர் ஆகியோர் கூறியதாவது:
அமெரிக்காவில் அதிக பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. சிறு விவசாயிகள் குறைந்தபட்சம் 250 ஏக்கர் அளவுக்கும், பெரிய விவசாயிகள் 3,000 ஏக்கர் அளவுக்கும் விவசாய நிலம் வைத்துள்ளனர்.
அங்கு, குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அதிகளவில் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். விவசாய வேலைக்கு அதிகளவில் ஆட்கள் வைத்துக் கொள்வதில்லை. விவசாயத்தில் ஈடுபடும் ஒரு வேலையாளுக்கு  தினசரி சம்பளமாக குறைந்தபட்சம் 5,400 ரூபாய் வழங்கப்படுகிறது.
வேளாண் பண்ணைகளில் அதிகளவில் சொட்டு நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. அங்கு தேவைக்கும் அதிகமான  மழை பெய்வதால் விவசாயம் செய்ய  தண்ணீர் பிரச்னையே இல்லை. கார்னல் பல்கலை அருகேயுள்ள பென்யான் பகுதியில் உள்ள வேளாண் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள உருளைக்கிழங்கு அறுவடைக்கு கூட இயந்திரங்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இயந்திரங்கள், இதுவரை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவில்லை.
 250 ஏக்கர் நிலத்தில் 10 முதல் 12 பேர் மட்டுமே விவசாயம் செய்கின்றனர். இவர்களைத்தவிர  இயந்திரங்களின் பயன்பாடு அதிகம் உள்ளது. அமெரிக்காவின் முக்கிய வேளாண் பயிராக மக்காச்சோளம் இருக்கிறது. இதுதவிர, காய்கறிகள், பாகற்காய், புடலைங்காய் அதிகம் பயிரிடப்படுகிறது.
அங்குள்ள விளை நிலங்களில் இயற்கை முறை விவசாயம் அதிகளவில் செய்யப்படுகிறது. மாட்டு சாணம் மட்கியபின், உரமாக பயன்படுத்தப்படுகிறது. ரசாயன உரங்களை அமெரிக்க விவசாயிகள் விரும்புவது இல்லை. இயற்கை முறை விவசாயத்தில் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு, மற்ற விளை பொருட்களை விட இரண்டு மடங்கு விலை கிடைக்கிறது.
இந்தியாவில் விவசாயிகள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு அதிக விலை கிடைப்பது இல்லை. ஆனால், அமெரிக்க விவசாயிகள், இந்திய விவசாயிகளின் நிலைக்கு இன்னும் தள்ளப்படவில்லை. கார்னல் பல்கலையில் விவசாய பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவ, மாணவியர் பலரும், விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் படிப்பை முடித்த பின் மீண்டும் விவசாயம் செய்யவே செல்கின்றனர். இவ்வாறு மாணவ, மாணவியர் கூறினர்.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் முதுநிலை படிப்புகளுக்கான ‘டீன்’ சந்திரபாபு கூறுகையில், “ இந்தியாவில் உள்ள நான்கு வேளாண்மை பல்கலை மற்றும் கார்னல் பல்கலை இடையே செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, 21 மாணவர்கள் அமெரிக்கா சென்று வந்துள்ளனர்.
அங்கு மேற்கொள்ளப்படும் விவசாயம், கலாச்சாரத்தை தெரிந்து கொண்டுள்ளனர். கார்னல் பல்கலையில் இருந்து 30க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்  ஜனவரி மாதம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கு வரவுள்ளனர்,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us