அரசியல்வாதிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அமைச்சர் வேண்டுகோள்!
அரசியல்வாதிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அமைச்சர் வேண்டுகோள்!
UPDATED : செப் 25, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: “ராணுவத்திற்கும், கல்வித்துறைக்கும் இணைப்பு பாலமாக இருக்கும் சென்னை பல்கலைக் கழகம், அரசியல்வாதிகளுக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முன்வர வேண்டும்,” என பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்தார்.
டில்லியில் உள்ள தேசிய ராணுவ பயிற்சிக் கல்லூரியில் படித்த ராணுவ வீரர்களுக்கு, சென்னை பல்கலைக்கழகத்தின் எம்.பில்., பட்டம் வழங்கும் விழா நடந்தது. ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம், நைஜீரியா, கொரியா, இலங்கை, ஐக்கிய அரபு நாடுகள், உகாண்டா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த 10 பேர் உட்பட 68 பேருக்கு எம்.பில்., பட்டம் வழங்கப்பட்டது.
விழாவில், சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் பேசுகையில், ‘தேசிய ராணுவ பயிற்சிக் கல்லூரியில் 2006ம் ஆண்டிற்கு முன்பு எம்.பில்., படித்தவர்களுக்கும் பட்டம் வழங்குவது குறித்து சென்னை பல்கலைக் கழகம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது’ என்றார்.
பாதுகாப்பு இணையமைச்சர் பல்லம் ராஜு பேசியதாவது:
சென்னை பல்கலைக்கழகம், விரைவில் தேசிய ராணுவ பயிற்சிக் கல்லூரியை ஆராய்ச்சி மையமாக அங்கீகரிக்கும் என நம்புகிறோம். தேச பாதுகாப்பில் புதிய சவால்களை எதிர்கொள்ளும் ராணுவத்திற்கு, அவற்றைச் சமாளிக்க புதிய தொழில் நுட்பங்கள் தேவைப்படுகின்றன.
சென்னை பல்கலைக்கழகம் ராணுவத்திற்கும், கல்வித் துறைக்கு பாலமாக இருந்து வருகிறது. அதேபோல, அரசியல்வாதிகளுக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முன்வர வேண்டும். இவ்வாறு பல்லம் ராஜு பேசினார்.
