UPDATED : அக் 20, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: வளர்ந்து வரும் தொழில்நுட்ப கல்வி அனைத்தையும், தமிழில் மாற்றி அமைக்க வேண்டும். அது இன்றைய தமிழறிஞர்கள் கையில் உள்ளது’, என இந்திய கம்யூ., மாநிலத் தலைவர் தா.பாண்டியன் பேசினார்.
கோவை கிழாரின் ‘ஆங்கிலப் பாமகள்’, வெள்ளிமலையின் ‘கொங்குநாட்டு புலவர்கள்’ ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா கோவை சன்மார்க்க சங்கத்தில் நடந்தது. புத்தக வெளியீட்டு விழாவில் இ.கம்யூ., மாநிலச் செயலாளர் பாண்டியன் பேசியதாவது:
கொங்குநாட்டு புலவர்கள் பலர் ஆங்கிலேயர்களை பற்றி ஆய்வு செய்து புத்தகம் எழுதியுள்ளனர். அதில் ஆங்கிலேயர்களின் கொடுமைகளை பற்றிய தகவல்களையே குறிப்பிட்டிருந்தனர். ஆனால் ஆங்கில இலக்கியத்தை தமிழுக்கு நிகராக மொழிபெயர்த்து எழுதிய புலவர்கள் இல்லை. அதை இப் புத்தகங்கள் நிறைவு செய்துள்ளன.
வெள்ளையர்கள் செய்த தவறில் ஒரு நல்ல விஷயமும் உள்ளது. அவர்கள் பழகிக் கொடுத்த ஆங்கிலத்தால் தான் இந்தியா தொழில்நுட்ப வளர்ச்சியிலும், கம்ப்யூட்டர் துறையிலும் உலக நாடுகள் மத்தியில் தலைநிமிர்ந்து நிற்கிறது.
சீனா தற்போது 2 டிரில்லியன் டாலர்களை கையிருப்பாக கொண்டுள்ளது. ஆனால் அமெரிக்கா 22 டிரில்லியன் டாலர்களை மற்ற நாடுகளிடமிருந்து கடனாக பெற்றுள்ளது. உலக அளவில் பணக்காரனாக இருந்த அமெரிக்கா, பிற நாடுகளிடம் கையேந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பணத்தை அதிக அளவு சேகரித்துள்ள சீனாவுக்கு ஆங்கிலம் சுட்டுப்போட்டாலும் வரவில்லை. அதனால் திறமையிருந்தும் வெளிப்படுத்த முடியாமல் சீனர்கள் தவிக்கின்றனர். ஆனால் செந்தமிழ்நாட்டுக்கு எம்மொழியும் வசப்படும். நம் தமிழர்கள் ஆங்கிலத்தில் பேசி ஆங்கிலேயர்களை வியக்க வைத்ததோடு, அவர்களுக்கே ஆங்கில இலக்கியம் கற்பித்தனர்.
ஆனால் இன்று தமிழின் நிலையோ கேள்விக்குறியாக இருக்கிறது. இலக்கணப் பிழையில்லாத தமிழை நாம் கற்றுக்கொள்ள பிற நாட்டினரின் உதவியை நாட வேண்டிய காலம் வந்துவிட்டது. எந்த மொழியையும் தன் வயப்படுத்திக் கொள்ளும் தமிழன், தன் மொழியை மறந்துவிட்டான். இதற்கு வரலாற்று உணர்வு தமிழர்களுக்கு குறைவானதே காரணம். இந்நிலையை மாற்ற வேண்டும்.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப கல்வி அனைத்தையும் தமிழில் மாற்றி அமைக்க வேண்டும். அது தமிழனால் முடியும் என்பதை நாம் சாதித்துக் காட்ட வேண்டும். அது இன்றைய தமிழறிஞர்கள் கையில் உள்ளது. இவ்வாறு இ.கம்யூ., மாநிலச் செயலாளர் பாண்டியன் பேசினார்.
இவ்விழாவில் பேரூராதீனம் சாந்தலிங்க அடிகளார், தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம், பி.எஸ்.ஜி. கல்லூரி முன்னாள் பேராசிரியர்கள் குருசாமி, வெள்ளிமலை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
