தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இடைநிலை ஆசிரியர் நியமனம்: தென்மாவட்டங்களுக்கு யோகம்

இடைநிலை ஆசிரியர் நியமனம்: தென்மாவட்டங்களுக்கு யோகம்

இடைநிலை ஆசிரியர் நியமனம்: தென்மாவட்டங்களுக்கு யோகம்


UPDATED : அக் 24, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாநில பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு தமிழக அரசு ஒப்புக்கொண்டதால், தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு ‘ஜாக்பாட்’ அடித்துள்ளது.
விரைவில், 7,286 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட இருப்பதால், இந்த மூன்று மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமான வேலை வாய்ப்புகளைப் பெற உள்ளனர். பள்ளிக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட அளவிலான பதிவு மூப்பு அடிப்படையிலும், பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் மாநில அளவிலான சீனியாரிட்டி அடிப்படையிலும் நியமிக்கப்படுகின்றனர்.
இடைநிலை ஆசிரியர்களுக்கான சீனியாரிட்டியால் வட மாவட்டங்களில் பதிவு செய்தவர்களுக்கு சில ஆண்டுகளிலேயே வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நிலை இருந்து வருகிறது. அதே நேரத்தில், தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்பை பெற பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்கள் அதிகமானவர்கள் இருக்கின்றனர்.
இந்த மாவட்டங்களில் காலி பணியிடங்கள் அதிகம் ஏற்படாது என்பதால், வேலை வாய்ப்பும் குறைவானவர்களுக்கே கிடைத்து வந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 1983- 84ம் ஆண்டில் பயிற்சியை முடித்தவர்களுக்கே இன் னும் வேலை கிடைக்கவில்லை.
அதனால், இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் மாவட்ட சீனியாரிட்டியை பார்க்காமல் மாநில சீனியாரிட்டியைக் கடைபிடிக்க வேண்டும் என்று அம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த பிரச்னை சட்டசபையிலும் பல முறை எதிரொலித்தது.
விளவங்கோடு தொகுதி மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., ஜான்ஜோசப், ராதாபுரம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., அப்பாவு போன்றோர், இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் மாநில சீனியாரிட்டியைக் கடைபிடிக்க வேண்டும் என்று பேசினர். ஆனால், இந்த விவகாரத்தில் தமிழக அரசு எந்தவிதமான முடிவும் எடுக்காமல் தாமதப்படுத்தி வந்தது. இந்நிலையில், ஆரம்பப் பள்ளிகளில் 7,286 இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய கடந்த ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், ‘மாநில அளவிலான சீனியாரிட்டி அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்’ என தீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் அந்தி அர்ஜுனா, சென்னை ஐகோர்ட் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் மாநில சீனியாரிட்டிபடி இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய ஒப்புக்கொண்டார்.
இதனால், பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவந்த மாவட்ட சீனியாரிட்டி முடிவுக்கு வந் துள்ளது. இனி மற்ற ஆசிரியர்களைப் போல் இடைநிலை ஆசிரியர்களும் மாநில பதிவு மூப்பின்படி நியமிக்கப்படுவர். சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு ஒப்புதல் அளித்தபடி விரைவில், 7,286 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
மாநில பதிவு மூப்பின் படி நியமனம் என்பதால் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமான வேலை வாய்ப்புகளைப் பெறுவர். ஆசிரியர் பயிற்சி முடித் தவர்கள் தென் மாவட்டங்களில் அதிகமாக இருப்பதால், பதிவு மூப்பிலும் இவர்களே முதலிடத்தில் இருக்கின்றனர்.
எனவே, அடுத்து ஒரு சில ஆண்டுகள் வரை இம்மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கே அதிகளவில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us