UPDATED : ஆக 11, 2013 12:00 AM
ADDED : ஆக 11, 2013 09:41 AM
மாமல்லபுரத்தில் இயங்கி வரும், அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி, ஆசியாவில் மரபுக்கலைக்கு புகழ் பெற்றது. தமிழக தொழில் துறையின் கீழ், இக்கலைகளுக்கான பயிலகமாக, 1957ம் ஆண்டு துவக்கப்பட்டது. மரபு கட்டடக்கலை மற்றும் கற்சிற்பக்கலை ஆகிய பாடப்பிரிவுகளில், 3 ஆண்டுகள் சான்றிதழ் கல்விமுறை இருந்தது.
இக்கலைகளில் ஆர்வமுள்ளவர்கள், கல்வித் தகுதி வரைமுறை இன்றி பயின்றனர். அதைத் தொடர்ந்து, கற்சிற்பக் கலையில், 4 ஆண்டுகள் பட்டய கல்வி முறை துவக்கி, 8ம் வகுப்பில் தேறியவர்கள் மட்டும், அனுமதிக்கப்பட்டனர்.
1975ம் ஆண்டு, தொழில்நுட்பத் துறையின் கீழ், கல்லூரியாக தரம் உயர்ந்தது. 2 ஆண்டுகள் புகுமுக பட்டய கல்வி, 3 ஆண்டுகள் பட்டய கல்வி என, 5 ஆண்டுகள் பட்டய கல்வி முறை துவக்கப்பட்டது.
கடந்த 1980ம் ஆண்டு, மரபு கட்டடக்கலை பாடப்பிரிவில், பட்ட கல்விமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. பட்டய கல்வியில் உயர் மதிப்பெண் பெற்றவர்கள், பட்ட கல்விக்கு அனுமதிக்கப்பட்டனர். 1984ம் ஆண்டு, மரபு கற் சிற்பம், சுதை சிற்பம், மர சிற்பம், உலோக சிற்பம் ஆகிய பாடப்பிரிவுகளிலும், பட்ட கல்வி துவக்கப்பட்டது. மரபு வண்ண பாடப்பிரிவு மட்டும் பட்டய கல்வியாக இருந்தது.
இக்கல்வி முறையின் போது, கல்லூரி சிறப்புடன் இயங்கியது. மரபு கலைகளுக்கு, ஒரே கல்லூரியாக புகழ் பெற்றது. கலைகளை, புகுமுக வகுப்பு துவங்கி, படிப்படியாக அறியும் முறையால், கற்பது எளிதாக இருந்தது. மாணவர்கள், உலகப்புகழ் ஸ்தபதிகளாக விளங்குகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து பயின்றவர்கள், சுயதொழிலாக சிற்பக்கூடங்கள் நடத்தி வருகின்றனர்.
இத்தகைய கல்லூரியில், கல்விமுறை மாற்றத்தால், மரபுக்கலைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. கடந்த 1991ம் ஆண்டு, கலை மற்றும் பண்பாட்டுத்துறைக்கு, கல்லூரி மாற்றப்பட்டது. பட்டய கல்விமுறை, 5 ஆண்டுகளிலிருந்து, 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. 10ம் வகுப்பு தேறியவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, 1996ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற குணசேகரன், 1998ம் ஆண்டு பட்டய கல்வி முறையை ரத்து செய்தார். மரபு கட்டடக்கலையில், பட்ட கல்வி (பி.டெக்.,), பிற சிற்பக்கலைகளில், பட்ட (பி.எப்.எ.,) கல்விமுறை திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பிளஸ் 2 அறிவியல் பாடப்பிரிவுகளில் தேறியவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
தற்போதைய சூழலில், பிளஸ் 2 பயின்றவர்கள், பொறியியல், மருத்துவம், பிற கல்வி என, கற்கவே விரும்புகின்றனர். மரபுக் கலைகளை பயில விரும்புவதில்லை. பி.டெக்., பி.எப்.ஏ., என குறிப்பிடும் பட்டங்கள், பிற கல்லூரி பட்டங்களை போன்றே உணர்த்துவதால், இங்கு சேர்கின்றனர். கல்லூரியில் வகுப்புகள் துவங்கி, பாடங்கள் அறிமுகமான பின், பயில விருப்பமின்றி விலகுகின்றனர்.
கல்விமுறை குளறுபடிகளால், மாணவர் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து, மரபுக்கலை கல்வி வளர்ச்சி தடைப்பட்டுள்ளது. இக்கலைகளை மேம்படுத்த, அரசு தீவிர கவனம் செலுத்துவது அவசியம். மீண்டும், பழைய கல்விமுறையை துவக்க வேண்டும் என, இக்கலை நிபுணர்கள் கருதுகின்றனர்.
கட்டடக் கலை உட்பட அனைத்து பாடப் பிரிவுகளுக்கும், 60 இடங்கள் உள்ளன. தற்போது முதலாம் ஆண்டு சேர்க்கை முடிந்த நிலையில், 27 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். முதலாண்டு முதல் 4ம் ஆண்டு வரை, 240 பேர் இருக்க வேண்டும். 91 பேர் மட்டுமே உள்ளனர்.
அவர்களுக்காக, முதல்வர், 16 விரிவுரையாளர்கள், 2 பயிற்றுனர்கள், 2 உதவி பயிற்றுனர்கள் என, 21 நிரந்தர ஊழியர்கள், தமிழ், இசை, கணினி ஆகிய பகுதிநேர பயிற்றுனர்கள், பிற அலுவலர்கள் என, 32 பேர் பணிபுரிகின்றனர். அரசும், ஏராளமாக செலவிடுகிறது.
இதுகுறித்து, ஸ்தபதி ஒருவர் கூறுகையில், "மரபுக்கலைக்கு புகழ்பெற்ற இக்கல்லூரி சீரழிந்து வருகிறது. பட்டய கல்விமுறையை, மீண்டும் துவக்கினால் தான், மரபுக்கலைகள் மேம்படும். இல்லையேல், வருங்காலத்தில், ஆகம கலைகளை, நாம் இழக்க வேண்டிய நிலையே ஏற்படும்" என்றார்.
