"பயிற்சி சார்ந்த கல்விக்கு நியூசிலாந்திற்கு வாருங்கள்"
"பயிற்சி சார்ந்த கல்விக்கு நியூசிலாந்திற்கு வாருங்கள்"
UPDATED : செப் 03, 2013 12:00 AM
ADDED : செப் 03, 2013 04:52 PM
சென்னை: இந்திய மாணவர்களுக்கு நியூசிலாந்தில் இருக்கும் கல்வி வாய்ப்புகள் குறித்த நியூசிலாந்து கல்வி நிறுவனங்களின் கண்காட்சி சென்னையில் நடந்தது.
வெளிநாட்டுக்கு சென்று கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்திய மாணவர்களை தங்கள் நாடுகளில் படிக்க வைப்பதற்கு ஒவ்வொரு நாடுகளும் முயற்சி செய்து வருகின்றன. அந்த வகையில் தற்பொழுது நியூசிலாந்து அரசாங்கத்தின் "கல்வி நிறுவனங்கள் மேம்பாடு மற்றும் வணிக வளர்ச்சி அமைப்பு” கல்வி கண்காட்சியை சென்னையில் நடத்தியது.
விக்டோரியா பல்கலைக்கழகம், கேன்டர்பரி பல்கலைக்கழகம், லிங்கன் பல்கலைக்கழகம் உட்பட மொத்தம் 25 கல்வி நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் கலந்துகொண்டன. நடைமுறை சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதாலும், இயற்கை சூழ்ந்த பகுதிகள், அமைதியான நாடு என்பதாலும், மாணவர்களால் விரும்பப்படும் நாடாக நியூசிலாந்து இருப்பதாகவும், குறைந்தது 12 மாதம் முதல் 24 மாதங்கள் வரை கற்றுத் தரப்படும் 180கும் மேற்பட்ட முதுநிலை படிப்புகள் தங்களிடம் உள்ளதாகவும் கல்வி நிறுவனங்கள் கூறின.
கல்வி கண்காட்சி குறித்து நியூசிலாந்து கல்விக்கான தெற்காசிய இயக்குநர் ஷைனா ஜலில் கூறுகையில், "இது போன்ற கண்காட்சிகள் இந்தியாவுக்கும் நியூசிலாந்திற்கும் இடையேயான கல்வி சம்பந்தமான உறவை உறுதிப்படுத்த உதவும். மேலும் கடந்த சில ஆண்டுகளாக நியூசிலாந்திற்கு படிக்க வரும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மகிழ்ச்சி தரக்கூடியது" என்றார்.
