UPDATED : செப் 13, 2013 12:00 AM
ADDED : செப் 13, 2013 02:12 PM
பட்டய கணக்காளர் படிப்பை முடித்த மாணவர்களுக்காக, இந்திய பட்டய கணக்காளர்களின் கல்வி நிறுவனம், செப்., 9ம் தேதி துவங்கி, 13ம் தேதி (இன்று) வரை நேர்காணல் நடக்கிறது. இதில், டாடா கன்சல்டன்சி - எஸ்.ஆர்.பி.சி., - ஆனந்த் ஆட்டோ மோடிவ் - வேதாந்தா - டி.சி.எஸ்., - ஐ.டி.சி., - பார்கலேஸ் உள்ளிட்ட சர்வதேச அளவில் புகழ்பெற்ற, 22 நிறுவனங்கள் கலந்து கொண்டு, மாணவர்களை தேர்வு செய்கின்றன.
இதுகுறித்து, ஐ.சி.ஏ.ஐ., மத்திய கவுன்சில் உறுப்பினர் சேகர் கூறியதாவது: தற்போது பொருளாதார மந்த நிலை நிலவுகிற போதிலும், பிரபல இந்திய தொழில் நிறுவனங்கள் மாணவர்களை, தங்கள் நிறுவனத்திற்கு தேர்வு செய்ய முன்வந்துள்ளன. இதில், 22 நிறுவனங்களில் உள்ள, 250 பணி இடங்களுக்கு நேர்காணல் நடக்கிறது.
மொத்தம் 5,000 மாணவர்கள் கலந்து கொள்வர் என, எதிர்பார்க்கிறோம். நேற்றுடன் முடிந்த கலந்தாய்வில், 150 இடங்கள் நிரப்பப்பட்டன. இன்று நடக்கும் கலந்தாய்வில், 50க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படும் என, எதிர்பார்க்கிறோம். சி.ஏ., படிப்பில் தேர்ச்சி பெறுவது கடினம் என்ற கருத்து, பெரும்பாலான மாணவர்கள் மத்தியில் நிலவுகிறது.
ஐ.ஏ.எஸ்., - ஐ.ஐ.எம்., - ஐ.ஐ.டி., தேர்வுகளை விட, சி.ஏ., தேர்வில், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாகவே உள்ளது. மேலும், சி.ஏ., முடிக்கும் மாணவர்களுக்கு, உள்நாட்டிலேயே நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. கடந்தாண்டு நடைபெற்ற வளாக நேர்காணல் நிகழ்ச்சியில், 57 நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில், 903 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு, சேகர் கூறினார்.
