UPDATED : செப் 19, 2013 12:00 AM
ADDED : செப் 19, 2013 10:26 AM
மூன்றாண்டு பி.எல்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று துவங்கியது. சென்னை, செங்கல்பட்டு, வேலூர், மதுரை, திருச்சி, கோவை, நெல்லை அரசு சட்டக் கல்லூரிகளில் உள்ள, 1,262 இடங்களுக்கு, 6,483 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இதில், தகுதியின் அடிப்படையில், 5,731 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, "கட்-ஆப்" மதிப்பெண் அடிப்படையில், மாணவருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கலந்தாய்வில், சென்னையைச் சேர்ந்த மாணவியர் திவ்யா, 90.04 "கட்-ஆப்" மதிப்பெண் பெற்று முதலிடம்; ஷாலினி, 87.00 "கட்-ஆப்" மதிப்பெண் பெற்று, இரண்டாமிடம்; அஸ்வினி, 86.52 "கட்-ஆப்" மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றனர். மூன்று பேரும், சென்னை சட்டக் கல்லூரியை தேர்வு செய்தனர்.
பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வில், 369 மாணவர்கள் கலந்து கொண்டனர். காலையில், 79 சதவீதம் "கட்-ஆப்" மதிப்பெண் பெற்றவர்களுக்கும், மதியம், 71 சதவீதம் "கட்-ஆப்" மதிப்பெண் பெற்றவர்களுக்கும் கலந்தாய்வு நடந்தது. பி.எல்., படிப்பிற்கான கலந்தாய்வு வரும், 21ம் தேதி வரை நடக்க உள்ளது. ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் முனுசாமி, முதல், ஒன்பது இடங்களைப் பிடித்தவர்களுக்கு, கல்லூரிகளில் இட ஒதுக்கீடு ஆணையை வழங்கினார்.
பல்கலைக்கழக பதிவாளர் சங்கர் கூறியதாவது: கடந்தாண்டு, பி.எல்., படிப்புக்கு 6,110 பேர் விண்ணப்பித்தனர். இந்தாண்டு இந்த எண்ணிக்கை, 6,483 ஆக அதிகரித்துள்ளது. 21ம் தேதி கலந்தாய்விற்கு பின் காலியாக உள்ள இடங்கள், மதிப்பெண் அடிப்படையில், தமிழக அரசின் இடஒதுக்கீடு அடிப்படையில், ஒரு வாரத்தில் நிரப்பப்படும். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிந்து, பி.எல்., வகுப்புகள் வரும், 30ம் தேதி துவங்கும். இவ்வாறு, சங்கர் கூறினார்.
மூன்றாண்டு பி.எல்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வழக்கமாக ஆகஸ்ட் இறுதியில் துவங்கும். ஆனால், நடப்பு கல்வியாண்டிற்கான கலந்தாய்வு, செப்., இரண்டாம் வாரத்தில் துவங்கியது.
இதுகுறித்து பல்கலைக்கழக வட்டாரங்கள் கூறுகையில், "சட்டக் கல்லூரிகள் தேர்வு முடிவுகளை தாமதமாக வெளியிட்டதால், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது" என்றன.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரை விட, ஆதிதிராவிட பிரிவினருக்கான, "கட்-ஆப்" மதிப்பெண் அதிகரித்து உள்ளது. மூன்றாண்டு சட்டப் படிப்புக்கான, "கட்-ஆப்" மதிப்பெண்ணை சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டது. இதில், ஆதிதிராவிடர், "கட்-ஆப்" மதிப்பெண் 66.22 சதவீதம். பி.சி., - எம்.பி.சி., பிரிவினர் "கட்-ஆப்" மதிப்பெண், 65.30 சதவீதம் முதல் 64.69 சதவீதமாக உள்ளது.
ஐந்தாண்டு பி.ஏ., - பி.எல்., சட்டப் படிப்பிலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரை விட, ஆதிதிராவிட பிரிவினருக்கான, "கட்-ஆப்" மதிப்பெண் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரிவு வாரியான "கட்-ஆப்" சதவீதத்தில்
ஓ.சி., 71.82
எஸ்.டி., 58.36
எஸ்.சி., (அருந்ததியினர்) 63.58
எஸ்.சி., 66.22
எம்.பி.சி., 64.69
பி.சி., (முஸ்லிம்) 65.30
பி.சி., 64.72
