தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு


UPDATED : டிச 15, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 15, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முதுநிலை மருத்துவப் படிப்பிலும், டிப்ளமோ படிப்பிலும் மாநில ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்து படிப்பை முடித்த டாக்டர்கள், மூன்றாண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும். இந்த நிபந்தனை, அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்தவர்களுக்கு பொருந்தாது என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2005-06ம் கல்வியாண்டில், முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கும், முதுகலை மருத்துவ படிப்புகளுக்கும் வெளியிடப்பட்ட விளக்கக் குறிப்பேட்டில், படிப்பை முடித்ததும் மூன்றாண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதாக உத்தரவாதம் அளிக்க வேண்டும். அவ்வாறு பணியாற்ற விரும்பாவிட்டால், முதுநிலை டிப்ளமோ டாக்டர்கள் இரண்டு லட்சம் ரூபாயும், முதுநிலை டாக்டர்கள் மூன்று லட்சம் ரூபாயும் செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணி முடிக்கும் வரை, முதுநிலை பட்டம் மற்றும் டிப்ளமோ சான்றிதழ்கள் வழங்கப் பட மாட்டாது என 2007ம் ஆண்டு ஜூன் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 
அதேபோல, மூன்றாண்டு அரசுப் பணிக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டது.
இவற்றை எதிர்த்து அகில இந்திய ஒதுக்கீட்டின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த டாக்டர்களும், அரசு பணியில் இல்லாத டாக்டர்களும் ஐகோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்தனர்.
அனைத்து வழக்குகளையும் நீதிபதி பால்வசந்தகுமார் விசாரித்தார். 


மாநில அரசு வெளியிட்ட விளக்கக் குறிப்பேட்டின் அடிப்படையில், விண்ணப்பிக்காத அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களை, உத்தரவாதப் பத்திரம் வழங்கும்படி நிர்பந்திக்க முடியாது. மனுதாரர்கள் தங்கள் படிப்புகளில் சேர்ந்த பிறகே, இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு மனுதாரர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். இதன்மூலம் அவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை ஈடு செய்யப்படுவதால், மூன்றாண்டுகளுக்கு அரசு மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையை வலியுறுத்த அவசியமில்லை என மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் ஏ.பழனியப்பன், வி.ஜெயப்பிரகாஷ் ஆகியோர் வாதிட்டனர்.

அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராமசாமி, சிறப்பு அரசு பிளீடர் சங்கரன் ஆகியோர், இப்படிப்புகளுக்காக, அரசுப் பணியில் இல்லாத டாக்டர்கள் மிகக் குறைந்த அளவாக 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஆண்டுக்கு கட்டணமாக செலுத்துகின்றனர். அதேசமயம், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்த வேண்டும். அரசு தனது வருவாயில் இருந்து இவர்களுக்கு கல்வியை வழங்குகிறது. அதனால், அரசின் உத்தரவாதத்தை ஏற்று கிராமப்புற ஏழை மக்களுக்கு பணியாற்ற வேண்டியது அவர்களின் கடமை, என வாதிட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவு:
அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வு மூலம், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு, விளக்கக் குறிப்பேட்டில் கூறப்பட்டுள்ள இந்த நிபந்தனைகள் பொருந்தாது. அப்படி ஏதேனும் மாணவர்கள் உத்தரவாதம் அளித்திருந்தால், அதற்கு எந்த வலுவும் கிடையாது. ஏனென்றால், அவர்கள் மாநில அரசின் விளக்கக் குறிப்பேட்டின் கீழ் விண்ணப்பிக்கவில்லை. அதேசமயம், மாநில ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்துள்ள பணியில் இல்லாத டாக்டர்கள், இந்த உத்தரவாதத்தை செயல்படுத்த வேண்டும். அவர்கள், அரசு  மருத்துவமனைகளில் மூன்றாண்டுகள் பணியாற்ற வேண்டும்.
தவறும் முதுநிலை டிப்ளமோ டாக்டர்களிடம் இருந்து இரண்டு லட்சம் ரூபாயும், முதுநிலை டாக்டர்களிடம் இருந்து மூன்று லட்சம் ரூபாயும் அரசு வசூலிக்கலாம்.
முதுநிலை மற்றும் முதுநிலை டிப்ளமோ மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்து படிப்பை முடித்து விட்டவர்களின் சான்றிதழ்களை தங்கள் வசம் வைத்துக் கொள்ள அரசுக்கு எந்த அதிகார வரம்பும் கிடையாது. இந்த சான்றிதழ்களை இரண்டு வாரங்களுக்குள் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
படிப்பை முடித்து, உத்தரவாதத்தின்படி தற்காலிகமாக அரசுப் பணியில் உள்ள டாக்டர்கள் எவரும், சிறப்பு நிபுணத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அனுமதி மறுக்கக் கூடாது.
சிறப்பு நிபுணத்துவ படிப்புகளுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அப்படிப்புகளில் சேர அனுமதிக்க வேண்டும். சிறப்பு நிபுணத்துவ படிப்புகளை முடித்த பின், அவர்கள் மீதமுள்ள காலத்துக்கு அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதிக்க வேண்டும்.
அதைச் செய்யத் தவறுபவர்களிடம், உத்தரவாதத் தொகையை அரசு வசூலிக்க நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us