ஆர்.டி.ஓ., முன்னிலையில் அமெரிக்கன் கல்லூரி திறப்பு
ஆர்.டி.ஓ., முன்னிலையில் அமெரிக்கன் கல்லூரி திறப்பு
UPDATED : டிச 18, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
மதுரை: ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்துவதற்காக ஆர்.டி.ஓ., முன்னிலையில் மதுரை அமெரிக்கன் கல்லூரி அலுவலகம் திறக்கப்பட்டு முதல்வர் மற்றும் செயலராக பி.ஆர்.அன்புதுரை பொறுப்பு ஏற்றார்.
அமெரிக்கன் கல்லூரியை நிர்வகிப்பதில் சி.எஸ்.ஐ., பிஷப் கிறிஸ்டோபர் ஆசீர் தரப்பினருக்கும், முதல்வராக இருந்த சின்ராஜ் ஜோசப் ஜெயக்குமாருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இது குறித்து ஐகோர்ட் கிளையில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதை விசாரித்த ஐகோர்ட் கிளை, துணை முதல்வரான பி.ஆர்.அன்புதுரை முதல்வராக பொறுப்பு வகிக்கலாம் எனவும், அவரே கூடுதலாக செயலர் பொறுப்பையும் கவனிக்கும்படியும் இடைக்கால உத்தரவிட்டது. பி.ஆர்.அன்புதுரை கல்லூரிக்கு செல்ல முயன்ற போது பிரச்னை ஏற்பட்டது. கல்லூரி மற்றும் அலுவலகத்திற்கு ஒரு பிரிவினர் பூட்டு போட்டனர்.
இந்நிலையில், ஆர்.டி.ஓ., ஜெயராஜ் முன்னிலையில் கல்லூரி கல்வி இணை இயக்குனர் பாண்டி, பொறுப்பு முதல்வர் அன்புதுரை மற்றும் பேராசிரியர்கள், ஊழியர்கள் டிச. 17ம் தேதி கல்லூரியை திறந்து அலுவலகத்திற்கு சென்றனர். துணை கமிஷனர் தொண்டிராஜ், ராஜேந்திரன், உதவி கமிஷனர் தங்கராஜ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக அவற்றின் சாவிகளை எதிர்தரப்பினர் இணை இயக்குனரிடம் ஒப்படைத்தனர். அன்புதுரை செயலராக கூடுதல் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அலுவலக ஆவணங்கள், பதிவேடுகள் முறையாக இருக்கிறதா என சரிபார்க்கப்பட்டது.
இணை இயக்குனர் கூறுகையில், ‘ஐகோர்ட் உத்தரவை செயல்படுத்தும் விதமாக கல்லூரி திறக்கப்பட்டு அன்புதுரை கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ளார்’ என்றார். அன்புதுரை கூறுகையில், ‘டிச., 18 முதல் கல்லூரியில் அனைத்து வகுப்புகளும் செயல்பட துவங்கும். விடுதியும் செயல்படும்’ என தெரிவித்தார்.
