தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘மூத்த பத்திரிகையாளருக்கு மரியாதை’: அமைச்சர் ராஜா

‘மூத்த பத்திரிகையாளருக்கு மரியாதை’: அமைச்சர் ராஜா

‘மூத்த பத்திரிகையாளருக்கு மரியாதை’: அமைச்சர் ராஜா


UPDATED : டிச 22, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 22, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
“ஒரு மூத்த பத்திரிகையாளர் இன்னொரு மூத்த பத்திரிகையாளருக்கு மரியாதை செலுத்தும் வகையில், டி.வி.ஆர்., நினைவு தபால் தலை வெளியீட்டு விழா அமைந்துள்ளது,” என்று மத்திய அமைச்சர் ராஜா பெருமிதம் தெரிவித்தார்.
‘தினமலர்’ நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் நூற்றாண்டு விழா நினைவு தபால்தலை வெளியீட்டு விழாவில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜா பேசியதாவது:
இந்திய அஞ்சல்துறை ஒரு மூத்த பத்திரிகையாளருக்குத் தன்னுடைய அஞ்சலியை செலுத்தும் விதத்திலும், அவருடைய உழைப்பைப் போற்றும் விதத்திலும் இந்த அஞ்சல் லை வெளியீட்டு விழா நடக்கிறது. பல்வேறு கலாசாரம் மொழியால் பகுக்கப்பட்டு, பிரிக்கப்பட்டிருந்தாலும் கூட அவர்களை எல்லாம் ஒற்றுமைப்படுத்துகின்ற ஒரு மைய விசையாக தபால்துறை 150 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது என, ‘தினமலர்’ ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி பெருமையாகக் கூறினார்.
அறிவியல் வளர்ந்து வரும் காரணத்தால் மனிதனின் அடையாளங்கள் இழந்து வருகிறதோ என்று எண்ணுகிற காலம் இது. கொட்டையில்லாத பழத்தையும், குஞ்சு பொரிக்காத முட்டையையும் மனிதன் எப்போது கண்டு பிடித்தானோ அப்போதே மனிதம் இல்லாத மனிதன் இந்த மண்ணிற்கு வந்துவிட்டானோ என்று எண்ணுகின்றேன். கிராமப்புறத்தில் இருக்கும் ஒரு தந்தை, தன் மகனுக்கு கடைசியாக ஒரு கடிதம் போட்டதாக ஒரு புதுக்கவிதை படித்தேன்.
அந்த கவிதையில், ‘மகனே நீ இ-மெயிலில் மூழ்கியிருக்கிறபோது, என்னை ஈ மொய்த்த செய்தி வந்து சேரும். நீ வந்தாலும் வராவிட்டாலும், இந்த செய்தியை தபால்காரன் எப்படியும் சேர்ப்பான்’ என குறிப்பிடப்பட்டு இருந்தது. அவ்வளவு பெருமை மிக்க அஞ்சல் துறை, சில சான்றோர்களுக்கு மட்டும் தான் அவர்களது அளப்பரிய பணியைக் கணக்கிட்டு தபால் தலையை வெளியிடுவது வழக்கம்.
முதல்வர் கருணாநிதியின் ஆணையை ஏற்று, இந்த தபால் தலையை வெளியிட மத்திய அரசு ஒப்புக் கொண்டு இந்த விழா சிறப்போடு நடந்துகொண்டிருக்கிறது. இந்திய  அரசியல் சட்டத்தில் 42வது சட்டத்திருத்தம் வந்தபோது, இந்தியாவில் எதைப் பற்றியும் பேசுவதற்கு நீதிமன்றத்திற்குக் கூட அருகதை கிடையாது; உரிமை கிடையாது என்ற நிலை ஏற்பட்டது.
அப்போது, ‘எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டேன். அரசியல் சட்டம் அப்புறம்; பத்திரிகை சுதந்திரம் பறிபோய்விடக் கூடாது’ என்று சொன்ன மூத்த பத்திரிகையாளரான முதல்வர் கையால் தபால்தலை வெளியிடப்படுகிறது. பாரதியாரின் தத்துவத்தில் தினமலர் நாளிதழுக்கு ஈர்ப்பு அதிகம் உள்ளது. அவரது சமூகப் பார்வையில் திராவிட இயக்கத்திற்கு ஈர்ப்பு அதிகம் உண்டு. பாரதியாரின், ‘மனதில் உறுதி வேண்டும்’ என்பது தத்துவம். அந்தப் பாடலும் திராவிட இயக்கத்திற்குப் பிடித்த பாடல் தான். ‘கன்னங்கரியது உலகம்’ என்ற பாரதியின் வரிகள் தான் அண்ணாவிற்குப் பிடித்த வரிகள்; எனவே தான், பாரதியை மக்கள் கவிஞர் என்று குறிப்பிட்டார்.
தத்துவத்தின் இருவேறு தளங்களில் இயங்கினாலும் கூட, ஒரு மூத்த பத்திரிகையாளர் இன்னொரு மூத்த பத்திரிகையாளருக்கு மரியாதை செலுத்துகிற நிகழ்ச்சியை, மத்திய அரசு இணைப்புப் பாலமாக இருந்து நிறைவேற்றும் விதமாகத் தான் இந்த விழா நடக்கிறது. குமரி மாவட்டம் தமிழகத்துடன் சேர வேண்டும் என்பதற்காக டி.வி.ஆர்., ஆற்றிய பணிகள் குறித்து குறிப்பிட்டனர். ஒருவேளை அந்தப் பணி நடைபெறாமல் போயிருக்குமானால், பல ஆண்டுகள் கழித்து வானை முட்டுகிற வள்ளுவர் சிலையை முதல்வர் கருணாநிதி அங்கு வைக்க முடியாமல் போயிருக்கும். டி.வி.ஆரின் செயல் போற்றத்தக்கது.
கேரள பல்கலைக்கழகத்தில் தமிழர்களுக்கு என்று ஒரு தமிழ்ப் பேராசிரியர் இல்லையே என்ற ஏக்கத்தினால், பெரிய போராட்டம் நடத்தி தமிழ்த்துறையும், தமிழ்ப் பேராசிரியரும் கொண்டுவர டி.வி.ஆர்., காரணமாக இருந்தார் என்பது பெருமையாக இருக்கிறது. ஒரு விவாதத்தில், இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக இருந்த ராஜேந்திர பிரசாத், ‘பார்லிமென்டும், சட்டசபையும் வெறும் பொழுதுபோக்கு அறைகளாக மாற்றப்படுகிறபோது, நிர்வாகத் துறை வெறும் மரச்சட்டமாக மாறுகிறபோது, நீதி வழங்கப்படுவது தாமதமாகும்போது, பத்திரிகைகள் தான் இந்த மூன்றையும் செயலாற்றும் தூணாக விளங்குகிறது. அதன் உரிமைகள் பறிக்கப்படக் கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த உணர்வோடு பத்திரிகையாளர்கள் பணியாற்ற வேண்டும். மூத்த பத்திரிகையாளருக்கு மற்றொரு மூத்த பத்திரிகையாளர் தபால் தலை வெளியிடுவதற்கு நானும் காரணமாயிருக்கிறேன் என்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அமைச்சர் ராஜா பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us