"மாணவர்களின் தகுதிக்கு ஏற்ப பாடங்களை உருவாக்குங்கள்"
"மாணவர்களின் தகுதிக்கு ஏற்ப பாடங்களை உருவாக்குங்கள்"
UPDATED : ஜூன் 21, 2014 12:00 AM
ADDED : ஜூன் 21, 2014 12:30 PM
சிவகாசி: "மாணவர்களின் தகுதிக்கு ஏற்ப மின்னணு பாடங்கள் உருவாக்கப்பட வேண்டும்" என மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்வியியல் துறை தலைவர் முத்துமாணிக்கம் கூறினார்.
சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் அகத்தரப்பு காப்புறுதி அமைப்பின் சார்பில் "மின்னணு பாடம் உருவாக்குதலும் மதிப்பிடுதலும்" என்ற தலைப்பில் நடந்த ஆசிரியர் மேம்பாட்டு நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,
"இன்றைய கல்வி சூழலில் ஆசிரியர்கள் தொழில்நுட்பத்துடன் இணைந்து பாடங்களை கற்பிப்பது பயனுள்ளதாக அமையும். ஆனால் மின்னணு பாடத்தை ஒவ்வொரு பாடத்திற்கு உருவாக்கி, அதை அந்த கல்லூரி இணையதளங்களில் பதிவேற்றம் செய்து விட்டால், மாணவர்கள் தேவைப்படும்போதெல்லாம் அந்த பாடங்களை படித்து கொள்வார்கள்.
மேலும், குறிப்பிட்ட கல்லூரி மாணவர்கள் மட்டும் இன்றி, பிற கல்லூரி மாணவர்களும் பயனடைவார்கள். அவ்வாறு உருவாக்கப்பட்ட பாடங்களில் தேவைப்படும் பொழுது புதிய செய்திகளையும் இணைத்து கொள்ள முடியும். மின்னணு பாடத்தை உருவாக்கும் பொழுது பாட வல்லுநர், ஊடகவியலார் மற்றும் மென்பொருள் வல்லுநர்கள் ஆலோசனைகளை பெற்று உருவாக்குவது சிறந்ததாகும்.
பயன்பெறக் கூடிய மாணவர்களின் தகுதிக்கு ஏற்ப மின்னணு பாடங்கள் உருவாக்கப்பட வேண்டும். பாடத்திற்கான கால அளவு சரியாக தீர்மானிக்கப்பட்டால்தான் பாடம் சிறப்பாக அமையும்" என்றார்.
முதல்வர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் மனோகர் வரவேற்றார். துணை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
