UPDATED : ஜூலை 06, 2014 12:00 AM
ADDED : ஜூலை 06, 2014 11:40 AM
ஒஹியோ: கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில், பல்கலைக்கழக அணியில் இடம் பெற்ற ஒன்பது வயது சிறுமியால் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுவாக நான்காவது படிக்கும் ஒன்பது வயது மாணவ மாணவியர் எந்த ஒரு விளையாட்டிலும் மிகச் சிறப்பாக விளையாடுவதில்லை. ஆனால் அமெரிக்காவை சேர்ந்த, ஜாடென் நியூமேன், 9, என்னும் சிறுமி இதற்கு விதிவிலக்கு.
சிறந்த தொழில்முறை விளையாட்டு வீரர்களைப் போன்று ஜாடென், கூடைப்பந்து விளையாட்டில் சிறந்து விளங்குவதை அறிந்த அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழகம் தனது கூடைப்பந்து குழுவில் ஜாடெனை சேர்க்க முடிவு செய்தது.
நான்கு அடி ஐந்து அங்குல உயரமுள்ள ஜாடெனுக்கு ஏற்கனவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுடன் கூடைப்பந்து போட்டியில் விளையாடி இருந்ததால், பல்கலைக்கழக அணியில் விளையாடுவது கடினமாக இருக்கவில்லை. இதுதவிர ஆர்லண்டோவின் டவுனி கிறிஸ்டியன் பள்ளி அணியுடன் ஜாடென் விளையாடி இருக்கிறார்.
மியாமி பல்கலைக்கழகத்தின் தலைமை பயிற்சியாளர் ஜாடெனின் திறமையைக் கண்டு, அவருடைய அணியில் சேர்த்தது மகிழ்ச்சியளிப்பதாக, ஜாடெனின் தந்தையும், அவரது அணியின் பயிற்சியாளருமான ஜெமி நியூமேன் கூறியுள்ளார்.
யூ-டியூபில் வெளியிடப்பட்ட இந்த விளையாட்டு போட்டியை லட்சக்கணக்கானோர் கண்டு ரசித்துள்ளனர். இதனால் ஜாடென் யூ-டியூப்பில் பிரபலமடைந்துள்ளார். பள்ளி அணியுடனான ஜாடென் விளையாடிய போட்டியை இதுவரை 6.54 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுள்ளனர்.
