தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி வளர்ச்சி நாளில் கசிந்த நினைவலைகள்

கல்வி வளர்ச்சி நாளில் கசிந்த நினைவலைகள்

கல்வி வளர்ச்சி நாளில் கசிந்த நினைவலைகள்


UPDATED : ஜூலை 16, 2014 12:00 AM

ADDED : ஜூலை 16, 2014 11:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 16, 2014 12:00 AM ADDED : ஜூலை 16, 2014 11:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டி அரசு கலைக் கல்லூரிக்கு "காமராஜர் - சல்லிவன் கல்லூரி" என்ற பெயரை சூட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தமிழகத்தில் காமராஜரின் பிறந்த நாளான நேற்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்ட நிலையில், 3,000 மாணவ மாணவியர் படிக்கும் நீலகிரி மாவட்டத்தின் முதல் கல்லூரியான ஊட்டி அரசு கலைக் கல்லூரி வருவதற்கு காமராஜரும் முக்கிய காரணமாக இருந்தார் என்ற பழைய நினைவுகள் முன்வைக்கப்பட்டன.

நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் வேணுகோபால் கூறியதாவது: கடந்த 1955ல் காமராஜர் முதல்வராக இருந்த போது ஊட்டியில் மக்களின் பங்களிப்பு மற்றும் அரசு நிதியுடன், அரசு கலைக் கல்லூரி திறக்க திட்டமிட்டு அதற்கான கட்டுமானப் பணிகள் நடந்தன.

மக்களின் பங்களிப்பில் 2 லட்சம் ரூபாய் நிலுவையில் இருந்த நிலையில், "அந்த தொகையை செலுத்தாவிட்டால், கல்லூரி செயல்பட அனுமதி வழங்க முடியாது" என அப்போதைய நிதி மற்றும் கல்வி அமைச்சர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் சோவியத் நாடுகளின் தலைவர்களான நிக்கோலய் பல்கானின், நிகிடா குருசெவ் ஆகியோர் ஊட்டிக்கு வருகை தர இருந்தனர்.

வரலாற்று முக்கியத்துவம் பெற்ற அவர்களின் வருகையை கூட பொருட்படுத்தாமல் எம்.பி., எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாக கமிட்டியினர் சென்னை விரைந்து முதல்வர் காமராஜரை அவரது வீட்டில் சந்தித்து கல்லூரியை திறப்பதில் உள்ள சிக்கலை எடுத்து கூறியுள்ளனர்.

கோபமடைந்த காமராஜர், "நான் வியாபாரம் நன்றாக நடக்க வேண்டும் என்பதற்காக பெட்டிக் கடை திறக்கவில்லை; மாறாக கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கில் கல்லூரியை திறக்கவுள்ளேன். நீங்கள் சென்று சோவியத் நாடுகளின் தலைவர்களை வரவேற்று, உங்களின் அன்றாட நிகழ்வை கவனியுங்கள்; கல்லூரி கட்டாயம் திறக்கப்படும்" என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக கல்வி அமைச்சர் சுப்ரமணியமும், "நான் கல்லூரியை திறக்க அனுமதி வழங்க மாட்டேன் என சொல்லவே இல்லை" என மக்கள் பிரதிநிதிகளை சமாதானப்படுத்தியுள்ளார். இந்த கல்லூரி கட்டடத்தின் ஒரு பகுதியில் நீலகிரியின் வளர்ச்சிக்கு காரணமான முதல் ஆங்கிலேய கலெக்டர் ஜான் சலீவனின் அலுவலகம் செயல்பட்டு வந்தது.

எனவே ஊட்டி அரசு கலைக் கல்லூரிக்கு "காமராஜர் - சல்லிவன் கல்லூரி" என பெயர் சூட்ட வேண்டும். இவ்வாறு வேணுகோபால் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us