UPDATED : ஆக 04, 2014 12:00 AM
ADDED : ஆக 04, 2014 11:21 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ராணி அண்ணாதுரை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால், கால்நடைகளின் புகலிடமாக பள்ளி வளாகம் மாறியுள்ளது.
காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் இயங்கி வருகிறது, ராணி அண்ணாதுரை நகராட்சி மேல்நிலைப்பள்ளி. 600க்கும் மேற்பட்ட மாணவியர் பயிலும் இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், கால்நடைகளின் புகலிடமாக பள்ளி வளாகம் உள்ளது. தினமும் காலையில் இறை வணக்கம் நடைபெறும்போது, பள்ளி வளாகத்தில் கால்நடைகள் இடைமறித்து நிற்கின்றன; பள்ளி வளாகத்தில் சில நேரங்களில் கால்நடைகள் சண்டையிடுகின்றன.
இதுபோன்ற சூழ்நிலைகள் மாணவியருக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. அச்சுறுத்தும் விதமாக உள்ள கால்நடைகள் பள்ளி வளாகத்தினுள் நுழையாமல் இருக்க, நகராட்சி நிர்வாகம் சுற்றுச்சுவர் அமைப்பது தொடர்பான பணிகளை விரைந்து செயல்படுத்த, மாணவியரின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் விமலா கூறுகையில், &'&'பள்ளி வளாகத்தில் சுற்றுச்சுவர் அமைப்பது தொடர்பாக நேரில் சென்று பார்வையிட உள்ளோம். அவ்வாறு பார்வையிட்ட பின், சுற்றுச்சுவர் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
