UPDATED : நவ 19, 2014 12:00 AM
ADDED : நவ 19, 2014 12:29 PM
பள்ளி செல்லும் வயதில், வேலைக்கு செல்லும் சிறுவர்களை மீட்கவே, குழந்தை தொழில் முறை ஒழிப்பு திட்டம் செயல்படுகிறது. இதன் மூலம் மீட்கப்படும் சிறுவர்களை, குழந்தைகள் நலக்குழு முன்னிலையில் ஒப்படைத்து, பாதுகாப்பான தங்குமிடம், உணவு, பள்ளி செல்லும் வாய்ப்பு என பல்வேறு வசதிகள் செய்து தரப்படுகின்றன.
இருப்பினும், வெளி மாநிலத்தவர் வருகையால், குழந்தை தொழிலாளர் முறைக்கு, முற்றுப்புள்ளி வைக்க முடியாத சூழலே நிலவி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக, மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்பு திட்டம், இரு ஆண்டுகளாக பணிகளை துவக்கியுள்ளது.
நகரின் மையப்பகுதிகளில் மீட்கும் சிறுவர்களை தனியாகவும், கிராமப்புற பகுதிகளில், கொத்தடிமைகளாக வேலை செய்த சிறார்களை தனியாகவும், மீட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பிட்ட தொழிலுக்காக, வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கையே அதிகம் என்பது ஆய்வுகளில் தெரியவந்தது.
இச்சிறுவர்களை மீட்டு, முறைசார் பள்ளிகளுக்கு அனுப்பி படிக்க வைத்தாலும், மீண்டும் பழைய தொழிலுக்கே திரும்பிவிடுகின்றனர். இதைத்தடுக்க, குறிப்பிட்ட தொழில் செய்யும் பகுதிகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சுந்தராபுரம், காந்திநகர் பகுதிகளில், கட்டட தொழிலுக்காகவும், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், பாக்கு தொழிலுக்கும், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தோட்ட வேலைக்கும், கணுவாய் பகுதியில் செங்கல் சூளை வேலைக்காகவும், குடும்பம் குடும்பமாக, பீகார், ஒரிசா, அசாம் மக்கள் வந்து தங்கியுள்ளனர்.
அவர்களது குழந்தைகளில் பெரும்பகுதியினர், அடிப்படை கல்விகூட பெறுவதில்லை. அவர்களது நலனுக்காக, கடந்தாண்டு காந்தி நகரில் சிறப்பு பள்ளி அமைத்து, 50 மாணவர்கள் அடிப்படை கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது. நடப்பாண்டில் தொண்டாமுத்தூரில் சிறப்பு பள்ளி அமைத்து, 50 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதன்வாயிலாக, பாக்குத்தொழிலில் ஈடுபட்ட சிறுவர்களுக்கு, கல்வி பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆர்வத்துடன் கூடிய கற்றலை தொடர செய்யவும், தொடர் வருகைப்பதிவை உறுதிப்படுத்தவும், திட்ட அதிகாரிகள் பல்வேறு கவுன்சிலிங் வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
திட்ட அதிகாரிகள் சிலர் கூறுகையில், ”சிறப்பு பள்ளிகளின் வாயிலாக, அதிகம் பயனடைவது, வெளி மாநில சிறுவர்களே. ஆரம்பத்தில் பள்ளிக்கு வரவே தயங்கும் சிறுவர்கள், பின்னாளில் முறைசார் பள்ளிக்கு செல்வதும், உயர்கல்வி பெறுவதும் கண்கூடு. துவக்க நிலையிலான ஆலோசனைகள், பெற்றோர் ஒத்துழைப்புக்கு அதிக களப்பணி தேவைப்படும். பின், கல்வியில் குழந்தைகளின் ஈடுபாட்டை அறிந்து, பெற்றோரே படிக்க வைக்க முன்வருகின்றனர்,” என்றனர்.
கல்விப்பயனடையும் வெளிமாநில சிறுவர்கள்
* கோவை மாவட்டத்தில் 2011ம் ஆண்டில் 56 பேரும், 2012ம் ஆண்டில் 38 பேரும், 2013ம் ஆண்டில் 64 பேரும், 2014ம் ஆண்டில் (அக்டோபர் வரை) 58 பேரும், குழந்தை தொழிலாளராக இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
* வெளி மாநில சிறுவர்களுக்கான, சிறப்பு பள்ளி திட்டம் கடந்தாண்டு முதல் செயல்படுகிறது. காந்திநகர் சிறப்பு பள்ளியில் பயின்ற, கோண்டி இன சிறுவர்களின் எண்ணிக்கை-50. இவர்கள், கட்டட தொழில், ஓட்டல் வேலைக்காக ஒப்பந்த முறையில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்து, பிறகு மீட்கப்பட்டவர்கள்.
* பாக்கு தொழிலுக்காக, தொண்டாமுத்தூர் பகுதியில், கொத்தடிமைகளாக இருந்த, 50 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

