UPDATED : ஆக 26, 2015 12:00 AM
ADDED : ஆக 26, 2015 10:23 AM
நாட்டிலேயே மிகப்பெரிய திரைப்பட படப்பிடிப்பு வளாகம் மற்றும் ஸ்டூடியோக்களுடன் கூடிய, எம்.ஜி.ஆர்., திரைப்பட கல்லுாரியில், செய்முறை பயிற்சியுடன், திரைத்துறை சார்ந்த டிப்ளமோ படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன. தற்போது செய்தித்துறை கட்டுப்பாட்டில் செயல்படும், இந்தக் கல்லுாரி, இனி, தமிழக இசை மற்றும் கவின்கலை பல்கலையுடன் இணைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, பல்கலை துணைவேந்தர் வீணை காயத்ரி கூறும்போது, திரைப்பட கல்லுாரியை, இசை பல்கலையுடன் சேர்ப்பதற்கான அலுவல் ரீதியிலான பணிகள் முடிந்து விட்டன. விரைவில், தமிழக அரசு ஆணை பிறப்பிக்கும், என்றார்.
பள்ளிகளில் இசை
வகுப்பு:
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தற்போது இசை மற்றும் ஓவிய வகுப்புகள் உள்ளன. ஆனாலும், இந்த வகுப்புகளுக்கு சரியான பாடத்திட்டமோ, செயல் வடிவமோ இல்லை. தேர்வு நடத்தி சான்றிதழும் தருவதில்லை.
இந்நிலையை மாற்ற, பள்ளிகளில் இசை, ஓவியம் மற்றும் பேஷன் டிசைன் வகுப்புகளை, தங்களது பாடத்திட்டத்தின் கீழ் நடத்த, இசை பல்கலை அனுமதி வழங்க உள்ளது. இசை பல்கலை அனுமதி பெற்று, பாடத்திட்டத்தை நடத்தினால், பல்கலையின் சான்றிதழ், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும்.
