UPDATED : செப் 22, 2015 12:00 AM
ADDED : செப் 22, 2015 10:23 AM
ஊட்டி: நடுவட்டம் ஊக்கர் ஆதி திராவிடர் உயர்நிலைப் பள்ளியில், ஆசிரியர் பற்றாக்குறையால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கிறது என, புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுவட்டம் ஊக்கர் ஆதி திராவிடர் உயர்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆனந்தன், மாவட்ட கலெக்டரிடம் வழங்கிய மனு: இப்பள்ளியில், 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, தமிழ் வழி, கன்னட வழி என, இரு பிரிவுகளில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கடந்தாண்டு முதல், நிரந்தர ஆசிரியர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. பள்ளியில், சமூக அறிவியல் பாடத்தில், ஒரே ஒரு பட்டதாரி ஆசிரியர் மட்டுமே உள்ளார். தமிழ், கணித பாடத்துக்கு, தலா, ஒரு ஆசிரியை மட்டும், வாரத்துக்கு, இரு நாட்கள் மட்டும் வந்து, பாடம் போதித்து செல்கின்றனர்.
தமிழ் வழி, கன்னட வழியில், மாணவர்களுக்கு மொழிப் பாடம் கற்பிக்க, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், மாதம் ஒருவருக்கு, 2,000 ரூபாய் வீதம் சம்பளத்தில், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, அனைத்து பாடங்களுக்கும் நிரந்தமாக ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும். இப்பள்ளியில் இளநிலை உதவியாளர் பணியும் காலியாக உள்ளது. ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களின் கல்வி பாதிக்கிறது. எனவே, தேவையான அளவு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு, ஆனந்தன் கூறினார்.
