கல்லூரியில் லேப்டாப் வழங்குவதை நிறுத்தியதால் தவிப்பு
கல்லூரியில் லேப்டாப் வழங்குவதை நிறுத்தியதால் தவிப்பு
UPDATED : அக் 15, 2015 12:00 AM
ADDED : அக் 15, 2015 10:57 AM
காரைக்குடி
: அரசு
உதவி பெறும் பள்ளிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவர்களுக்கு, இந்த ஆண்டாவது லேப்டாப் வழங்க அரசு முன்வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு அரசின் இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. கடந்த 2011-12, 2013-14ம் கல்வி ஆண்டில் கல்லூரிகளிலும் வழங்கப்பட்டன. 2014-ம் கல்வி ஆண்டில் இருந்து பள்ளிகளில் வழங்குவதால் கல்லூரிகளில் நிறுத்தப்பட்டது. அரசு பள்ளிகளை பொறுத்தவரை பிளஸ் 2வில் அனைத்து குரூப் படித்த மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது. உதவி பெறும் பள்ளிகளில் சுயநிதி பிரிவின் கீழ் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு நடத்தப்படுவதால், அம்மாணவர்களுக்கு இல்லை.
இதனால், ஒவ்வொரு ஆண்டும் லேப்டாப் வழங்காததை கண்டித்து மாணவர்கள் பள்ளி முன்பு மறியல் உட்பட பல கட்ட போராட்டம் நடத்துகின்றனர். இறுதியாக அரசாணைப்படி உங்களுக்கு வழங்க வழிவகை இல்லை என்ற பதிலை கூறி மாணவர்களை ஏமாற்றத்துடன், பள்ளி நிர்வாகங்கள் அனுப்பி விடுகின்றன.
இவர்கள் இன்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மேற்படிப்பு படிக்கும்போது, லேப்டாப் இல்லாத நிலையில் விரக்தி அடைகின்றனர். தனியார் பள்ளி மாநில செயலாளர் சுப்பிரமணியன் கூறும்போது, ஒவ்வொரு ஆண்டும் மாநிலம் முழுவதும், அரசு உதவி பெறும் பள்ளியிலிருந்து, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் படித்து 35 ஆயிரம் மாணவர்கள் வெளியேறுகின்றனர்.
இவர்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள், ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. ஆனால், லேப்டாப் வழங்குவதில்லை. குறிப்பாக இவர்களுக்கு தான் முன்னுரிமையுடன் வழங்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்கள், வசதி படைத்தவர்கள் அல்ல. லேப்டாப் வழங்க அரசு ஆவண செய்ய வேண்டும், என்றார்.
