UPDATED : ஏப் 18, 2016 12:00 AM
ADDED : ஏப் 18, 2016 11:06 AM
திருப்பரங்குன்றம்
:
பெற்றோரை மதிப்பதே கல்வி கற்றதன் பயனாகும் என துணை வேந்தர் பாஸ்கர் பேசினார்.
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா செயலாளர் விஜயராகவன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ராஜகோபால்,பொருளாளர் கோவிந்தராஜன், உதவி செயலாளர் ராஜேந்திரபாபு முன்னிலை வகித்தனர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணை வேந்தர் பாஸ்கர் பேசியதாவது: ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்து ஒரு லட்சத்து 32 ஆயிரம் மாணவர்கள் அமெரிக்காவிற்கு படிக்க செல்கின்றனர். இதனால் எட்டாயிரம் கோடி ரூபாய் வெளிநாட்டுக்கு செல்கிறது. ஆஸ்திரேலியாவில் உயர் கல்வி சிறப்பாக உள்ளது. அந்நாட்டு முக்கிய வருமானம் உயர்கல்விமூலம் கிடைக்கிறது.
இந்தியாவில் முன்பு நாலந்தா, தட்சசீலம் பல்கலைகழகங்கள் இருந்தன. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான மாணவர்கள் இந்தியாவிற்கு படிக்க வந்தனர். அந்த நிலை மீண்டும் வர வேண்டும். கடந்த 16 ஆண்டுகளில் கல்வித்துறையில் அறிவியல், தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால் சமூகத்தை அச்சுறுத்தும் பிரச்னைகளில் நாம் கவனம் செலுத்தாமல் பின்தங்கி உள்ளோம்.
மாணவர்கள் பிரச்னைகளை திடமாக எதிர்கொள்ள வேண்டும்.குறிக்கோள்களை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். கூட்டு குடும்பம் சிதைவது நல்லதல்ல. கோடிக்கணக்கான பணத்தைவிட தாய் தந்தையை மதிப்பதே கல்வி கற்றதன் பயனாகும், என்றார்.
804 மாணவர்கள் பட்டம் பெற்றனர். பல்கலை அளவில் மதிப்பெண்கள் பெற்ற தனராம்,
அர்ச்சனா, கார்திகேயன், ஐஸ்வர்யா, பாதரனிஷா, சுப்புராஜூ நாகமணி, கனிமணி, சிவகாமி, கார்த்திகேயனுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. முதல்வர் நேரு, சுயநிதிப்பிரிவு இயக்குனர் ராஜாகோவிந்தசாமி, விழா ஒருங்கிணைப்பாளர் லட்சுமி கலந்து கொண்டனர்.
