UPDATED : அக் 05, 2009 12:00 AM
ADDED : அக் 05, 2009 11:29 AM
சம்பல்பூர்: ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்ற ஒரிசாவை சேர்ந்த இளைஞருக்கு, வருகைப்பதிவு இல்லை என்று கூறி, ஐ.டி.ஐ., தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரிசா மாநிலத்தில் பார்கர் மாவட்டம், அட்டபிர்ரா நகரில் வசித்து வருபவர் பிரம்மோத்; இவர் ஹிராகுட் நகரில் உள்ள ஐ.டி.ஐ.,யில் படித்து வருகிறார். இவர் 2007ம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற ஊனமுற்றோருக்கான உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் பெற்றார்.
கடந்தாண்டு, தாய்லாந்தில் நடைபெற்ற ஆசியா பாரா ஒலிம்பிக் போட்டியில் இரட்டையர் பிரிவில் தங்கமும், ஒற்றையர் பிரிவில் வெண்கலமும் பெற்றார். போட்டிக்காக பயிற்சி பெற வேண்டியிருந்ததால் இவரால் இரண்டு மாதங்களுக்கு ஐ.டி.ஐ.,க்கு போய் பயிற்சி பெற முடியவில்லை. இவரது வருகைப் பதிவு போதுமானதாக இல்லை என்று காரணம் காட்டி நிர்வாகம், இவரை இறுதித் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இந்த செயலால் இவர் சற்றும் மனம் தளரவில்லை. ‘அடுத்த ஆண்டு தேர்வுக்கு சிறந்த முறையில் என்னை தயார் செய்ய உள்ளேன்’ என்று கூறி வருகிறார்.
