நல்லாசிரியர் விருது: போராட்ட ஆசிரியர்கள் புறக்கணிப்பு
நல்லாசிரியர் விருது: போராட்ட ஆசிரியர்கள் புறக்கணிப்பு
UPDATED : செப் 05, 2020 12:00 AM
ADDED : செப் 05, 2020 08:55 AM
சிவகங்கை:
ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களை, நல்லாசிரியர் விருது தகுதி தேர்வு பட்டியலில் கூட சேர்க்காதது ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்பது அம்ச கோரிக்கையை முன்வைத்து 2019 ஜன.,21 முதல் 29 வரை ஆசிரியர், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 6568 பேர் மீது 17பி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்வரிடம், சங்க நிர்வாகிகள் கேட்டும் ஒழுங்கு நடவடிக்கை ரத்தாகவில்லை. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நல்லாசிரியர் விருதுக்கான முதல் பட்டியல் முதன்மை கல்வி அலுவலகம் மூலம் அரசுக்கு அனுப்பப்பட்டது. அதில் போராட்டத்தில் ஈடுபட்டோரின் விண்ணப்பமும் சென்றது.
இதை அறிந்த அரசு, 17பி ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படாமல், போராட்ட காலத்தில் பள்ளி வருகை பதிவேட்டில் கையெழுத்திடாத ஆசிரியர்களின் விண்ணப்பத்தை நீக்கிவிடுமாறு கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. இதனால் அவசர அவசரமாக 2வது பட்டியலை அனுப்பினர். அதன்படி 375 பேர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். செப்.,7 ல் அந்தந்த மாவட்டத்தில் விருது வழங்கப்படும்.
விருது விழா புறக்கணிப்பு
தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் ஆர்.இளங்கோ கூறுகையில், &'&'சங்கம் பதிவு, நடைமுறை சட்டம் 1969 மற்றும் 1975ன் படி 24 சங்கங்களுக்கு அரசே அங்கீகாரம் அளித்துள்ளது. எங்களது நியாயமான கோரிக்கையை கேட்டுத்தான் போராடினோம்.
அரசு, 17பி ஒழுங்கு நடவடிக்கையில் உள்ள 5068 ஆசிரியரின் பெயரை தவிர்த்து, மற்ற ஆசிரியர்களின் விண்ணப்பத்தை ஏற்றிருக்கலாம். ஆனால் 2019 ஜன.,21 முதல் 29 வரை வருகை பதிவேட்டில் கையெழுத்திடாத ஆசிரியர்களின் பெயர்களை கூட விருதுக்கு பரிந்துரை செய்யாதது ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் புறக்கணிப்பர்&'&' என்றார்.
